இந்தியாவுக்கு பேராபத்து.. பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் வங்கதேசம் போனது ஏன்? உல்பாவை வைத்து பெரிய சதி
டாக்கா: பாகிஸ்தானின் உளவு மற்றும் ராணுவ அதிகாரிகள் வங்கதேசத்துக்கு சென்று நம் நாட்டின் எல்லையில் ரகசியமாக விசிட் செய்ததோடு சிறையில் உள்ள உல்பா பயங்கரவாதியான அசாமை சேர்ந்த பரேஷ் பருவை சந்தித்துள்ளனர். இதனால்வங்கதேசம் - பாகிஸ்தான் இணைந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து பெரும் பிரச்சனையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக ‛மிஷன் நார்த் ஈஸ்ட்' திட்டம் இருக்கலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து அங்கு அமைந்துள்ள இடைக்கால அரசுக்கும், நம் நாட்டுக்கும் சுமூக உறவு இல்லை.இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நம்முடன் மோதலில் இறங்கி உள்ளார். பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

கடந்த வாரம் வங்கதேச ஆயுதப்படை பிரிவின் முதன்மை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் எஸ்எம் கமரூல் ஹசன் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்று அந்த நாட்டு முப்படை தளபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் அடுத்தக்கட்டமாக பாகிஸ்தானின் உளவு மற்றும் ராணுவ அதிகாரிகள் வங்கதேசம் சென்றுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து 54 ஆண்டுகள் ஆகும் நிலையில் பாகிஸ்தான் அதிகாரிகள் முதல் முறையாக அங்கு சென்றுள்ளனர். பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசீம் மாலிக், மேஜர் ஜெனரல் ஷாகித் அமீர் அப்சர், மேஜனல்ஆலம் அமீர் அவான், முகமது உஸ்மான் ஜாதிப் உள்ளிட்டவர்கள் வங்கதேசம் சென்றனர். 4 நாட்கள் அங்கு தங்கியிருந்து வங்கதேச அதிகாரிகளுடன் ஆலோசித்தனர். இதில் மேஜர் ஜெனரல் ஷாகித் அமீர் அப்சர் சீனாவுடன் நெருக்கமான உறவை வைத்துள்ளார்.

அதோடு பாகிஸ்தான் அதிகாரிகள் நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை சிலிகுரி காரிடார் வழியாக மேற்கு வங்கத்துடன் இணைக்கும் பகுதி கோழிக்கழுத்து (Chicken Neck) பகுதிக்கு அருகே வந்து ரகசிய விசிட் செய்துள்ளனர். இந்திய எல்லையில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கதேசத்தின் ரங்பூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட இடத்தை அவர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர். ஏற்கனவே கோழிக்கழுத்து பகுதியில் துருக்கி ட்ரோனை பயன்படுத்தி வங்கதேசம் உளவு பார்க்கும் சூழலில் இது நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேசம் வந்த பாகிஸ்தான் அதிகாரிகள் வங்கதேசத்தின் டைரக்டர் ஜெனரல் ஆலம் அமீர் அவான் என்பவரை சந்தித்துள்ளனர். இவர் தான் தற்போது வங்கதேசத்தின் உளவுப்பிரிவு தொடர்பான ஆபரேஷன்களை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் பாகிஸ்தான் அதிகாரிகள் சிறையில் உள்ள உல்பா (ULFA) கமாண்டர் பரேஷ் பருவா என்பவரை சந்தித்துள்ளனர்.
இவர் யார் என்றால் அசாமில் பிறந்தவர். இந்திய பிரிவினைவாதியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர். யுனைடெட் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆஃப் அசோம் (United Front of Asom) அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்த அமைப்பை தான் சுருக்கமாக உல்பா என்பார்கள். இந்த அமைப்பின் நோக்கம் என்பது இந்தியாவில் இருந்து அசாமை தனியாக பிரிப்பது தான். இதற்காக உல்பா பல சதிவேலைகளை செய்ததால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் கமாண்டராக செயல்பட்ட பரேஷ் பருவாவுக்கு அசாம் மட்டுமின்றி அனைத்து வடகிழக்கு மாநிலங்கள் குறித்த விபரம் தெரியும். அதுதொடர்பான விபரங்களை கேட்டறிய தான் பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அதிகாரிகள் சந்தித்த பரேஷ் பருவா.. கடந்த 2004ல் இந்தியாவுக்கு பயங்கரமான ஆயுதங்களை 10 லாரிகளில் கடத்த முயன்ற வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தற்போதைய இடைக்கால அரசு வங்கதேசத்தில் உள்ள நிலையில் கடந்த மாதம் அவரது மரண தண்டனையை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மரண தண்டனை என்பது 14 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்துள்ளது. இதையடுத்து தான் வங்கதேசத்தில் மீண்டும் உல்பா பயங்கரவாத அமைப்பு தலைதூக்க தொடங்கி உள்ளது. இந்த அமைப்பின் நோக்கம் என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்துவது தான்.

ஏற்கனவே நம் நாட்டின் வடகிழக்கு மாநில எல்லையையொட்டி வங்கதேசத்தின் பகுதியில் உல்பா பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் மீண்டும் வங்கதேசத்தில் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி முகமை ஹசீனா ஆட்சியில் மூடப்பட்டது. தற்போது அங்கு மீண்டும் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முகாம் என்பது வங்கதேசத்தில் ஓடும் காஸ்சலாங் ஆற்றின் கரையோரம் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பயிற்சி முகாம் என்பது பாகைசாரி மற்றும் திகினாலா பகுதியை உள்ளடக்கி உள்ளது. இந்த பயிற்சிக்கு வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களை பரேஷ் பருவாவின் ஆதரவாளர்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த வேளையில் பாகிஸ்தான் அதிகாரிகளின் இந்த செயல் என்பது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால் தான் வங்கதேசம் - பாகிஸ்தான் இணைந்து ‛மிஷன் நார்த் ஈஸ்ட்' என்ற திட்டத்தை கையில் எடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதன்மூலம் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக நம் நாட்டுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன்மூலம் ஒரே கல்லில் 2 மாங்காயை அடிக்க பாகிஸ்தான் திட்டமிட்டு இருக்கலாம். ஒன்று நம் நாட்டுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தலாம். இன்னொன்று அந்த பழியை அப்படியே வங்கதேசத்தின் மீது போடலாம். இதனால் தான் பாகிஸ்தான் அதிகாரிகள் பரேஷ் பருவாவை சந்தித்து இருக்கலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
தற்போது வங்கதேச சிறையில் உள்ள பரேஷ் பருவா அசாமில் பிறந்தவர். அசாமை நம் நாட்டிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உல்பா பயங்கரவாத அமைப்பை தொடங்கினார். நம் நாட்டில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் சீனாவுக்கு சென்றார். சீனாவில் இருந்து நமக்கு குடைச்சல் கொடுத்தார். சீனாவும் அவரது உல்பா அமைப்புக்கு உதவி செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உண்டு. அதன்பிறகு 2001-2006ல் வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் ஆட்சி நடந்தது.அப்போது சீனாவில் இருந்து பரேஷ் பருவா வங்கதேசம்சென்றார்.
2004ல் வங்கதேசத்தின் சட்டகிராமில் இருந்து நம் நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினை தூண்டும் வகையில் செயல்படும் அமைப்பினருக்கு 10 லாரிகளில் ஆயுதம் அனுப்ப முயற்சிக்கப்பட்டது. இந்த ஆயுதங்கள் சீனாவில் இருந்து வங்கதேசம் வழியாக நம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்தது. அப்போது மேற்கொண்ட சோதனையின் 10 லாரிகளில் 4,930 துப்பாக்கிகள், 27,020 கையெறி குண்டுகள், 840 ராக்கெட் லாஞ்சர், 300 ராக்கெட்டுகள், 2,000 கையெறி ஏவுகணை குழாய், 6,392 பத்திரிகைகள் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யபப்ட்டன.
இந்த வழக்கில் தான் பரேஷ் பருவாவை வங்கதேசம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இப்படி இந்தியாவுக்கு எதிராக பெரிய சதி வேலையை செய்த பரேஷ் பருவாவை பாகிஸ்தான் அதிகாரிகள் சந்தித்துள்ளது என்பது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இதனால் நம் நாடும் சுதாரிக்க தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அவசியம் நம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications