எவரெஸ்ட் “சிகரம் தொட்ட” முதல் தமிழ் பெண்.. சாதித்த முத்தமிழ்ச்செல்வி! வாழ்த்திய ஸ்டாலின், உதயநிதி
டோக்யோ: உலகின் மிக உயரமான மலைச் சிகரமான இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு சாதனை படைத்து இருக்கும் முதல் தமிழ் பெண்ணான முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. 38 வயதாகும் இவர் கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இவருக்கு எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உச்சியை தொட வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே ஆசை இருந்துள்ளது.

இதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே, அதற்கான பயிற்சியை மேற்கொண்ட அவர் தனது விருப்பத்தை தமிழ்நாடு அரசிடம் தெரிவித்து நிதி உதவி வழங்க கோரினார். அதன்பேரில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்தார்.
இதனை தொடர்ந்து இமய மலையேற்றத்தை தொடங்கிய முத்தமிழ்ச்செல்விக்கு ட்விட்டரில் கடந்த மே 17 ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதில், "எல்லோருக்கும் சாதனை படைத்து, தாங்களே 'முதல்' என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

அதற்கான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடைந்திடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, புகழின் உச்சிக்குச் செல்ல, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஜோகில்பட்டியைச் சேர்ந்த திருமிகு. முத்தமிழ்ச்செல்வி அவர்கள்! எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை நோக்கி 7200 மீட்டர் உயரத்தைக் கடந்து பயணிக்கும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தொலைபேசி வாயிலாகப் பகிர்ந்தேன்.
எட்டிவிடும் தூரத்தில் இருக்கும் சாதனை அவருக்கு வசப்படட்டும்! இன்னும் பல பெண்கள் சாதனை படைத்திட அவர் ஊக்கமாக விளங்கட்டும்!" என்று அவர் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் உச்சிக்கு சென்று சாதனை படைத்து இருக்கிறார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "எவரெஸ்ட் உச்சியைத் தொட்டுத் திரும்பியுள்ள சாதனைப் பெண்மணி திருமிகு. முத்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், "எவரெஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல. தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சியை தொடங்கியிருந்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி முத்தமிழ்ச்செல்வி.
அவரது பயணத்துக்கு கழக அரசு & தனியார் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண்மணியாக வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பியுள்ளார். தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள். அவரது சாதனை பயணங்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications