ISSக்கு போகும் முதல் இந்தியர்! ஏன் மனிதர்களை ஸ்பேஸுக்கு அனுப்புவது இந்தியாவுக்கு முக்கியம்?
நியூயார்க்: இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு(ISS) இந்தியரான சுபான்சு சுக்லா பயணிக்கிறார். ISS போகும் முதல் இந்தியரும் இவர்தான். ஏன் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுகிறார்கள்? இது இந்தியாவுக்கு ஏன் முக்கியம் என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.
இந்த பூமியில் மனிதர்கள்(Homo sapiens) தோன்றி 3 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. இந்த காலத்தில் மனிதன் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளான். பூமியின் வயதுடன் ஒப்பிடுகையில் இந்த சாதனை வெறும் 0.0066% கால நேரத்தில் நடந்திருக்கிறது. அப்படியெனில் இனி வரும் காலத்தில் மனிதன் எவ்வளவு சாதனைகளை செய்ய முடியும்? இதற்கு உந்துதலாக இருப்பது விண்வெளி துறைதான்.

1969ல் மனிதன் முதன் முதலில் விண்வெளியில் கால் எடுத்து வைத்தான். இது இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளில் அறிவியல் துறை வேகமாக வளர இந்த சாதனை முக்கியமானது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இதற்கு பெயர்தான் Frontier Spirit / Exploration Drive. அதாவது மனித இனத்திற்குள்ளேயே இருக்கும் அறியாததை ஆராயும், புதிய எல்லைகளைக் கடக்கும் ஆர்வம்.
அந்த காலத்தில் சோவியத் ரஷ்யாவும்-அமெரிக்காவும் எதிரி நாடுகள். ஆனாலும் கூட, அமெரிக்காவின் இந்த சாதனையை சோவியத் அங்கீகரித்தது. சோவியத் ஊடகங்களான பிராவ்டா மற்றும் இஸ்வெஸ்டியா போன்றவை இந்த சாதனையை பாராட்டின. அவ்வளவு ஏன், சோவியத் பிரதமர் அலெக்ஸி கோசிகின், "நிலவில் மனிதர்களின் முதல் இறங்கியது ஒரு மாபெரும் சாதனை. இது விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல்" என்று இந்த சாதனையை பாராட்டியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை நிலாவை பார்த்து சோறு சாப்பிட்டுக்கொண்டிருந்த இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த சாதனை ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் நிலவில் கால் வைத்த சம்பவம், இந்தியாவில் இருக்கும் இளைஞர்கள் மத்தியிலும், விஞ்ஞானிகள் மத்தியிலும் உந்துதலை ஏற்படுத்தியிருக்கிறது எனில், இந்தியாவை சேர்ந்த ஒருவர் முதல் முறையாக ISSக்கு செல்வது நம்மை போன்ற இளைஞர்களுக்கு எந்த அளவுக்கு பாசிட்டிவ் vibe-ஐ கொடுக்கும் என்று யோசித்து பாருங்கள்! எனவேதான் இன்றைய விண்வெளி பயணம், இந்தியாவுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.
பயணத்தின் நோக்கம்
இந்த திட்டம் மூலம், இந்தியா, அமெரிக்கா, போலந்து, மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள், பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்கள் 14 நாட்கள் அங்கு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். விண்வெளியில் உணவு எப்படி செரிமானம் ஆகிறது? ஊட்டச்சத்து எப்படி கடத்தப்படுகிறது? என்பது குறித்து பல அறிவியல் சோதனைகள் நடத்தி பார்க்கப்படும்.
இந்த பயணம் மூலம் எதிர்காலத்தில் இந்தியா சொந்தமாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப இருக்கிறது. இந்த திட்டத்திற்கு ககன்யான் மிஷன் என்று பெயர்.
இன்றைக்கு தொழில்நுட்பம் பரவலாக வளர்ந்து இருக்கலாம். ஏராளமான ரோபோக்கள் வந்திருக்கலாம். மனிதனை விட இந்த ரோபோக்கள் திறன் வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால், மனிதன் மற்றொரு கிரகத்தில் காலடி வைப்பது உலக மக்களுக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. இது கற்பனையைத் தூண்டுகிறது மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட ஊக்குவிக்கிறது. எந்த ஒரு ரோபோவாலும் இந்த உணர்வை உருவாக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications