ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் பலி.. மளிகை கடை முன்பு நிகழ்ந்த சோகம்.. உடல் எங்கே? நண்பர்கள் தவிப்பு
கீவ்: உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவர், மளிகை பொருள்களை வாங்குவதற்காக ஒரு கடை வாசலில் நின்றிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூட்டை ரஷ்ய ராணுவம் நடத்தியதாக இந்திய மாணவருடைய நண்பர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 6 நாட்களாக போரிட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள விமான நிலையம், நீர் மின் நிலையம், அனல் மின் நிலையம் உள்ளிட்டவற்றின் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு உக்ரைனை தவிர மற்ற பகுதிகளில் குண்டு சப்தம் கேட்டுக் கொண்டே இருப்பதால் அங்கிருப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கிருந்து தப்பி அண்டைய நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட 1000 கி.மீ. பயணம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.

போரை நிறுத்துங்கள்
உக்ரைன் மீது ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனினும் ரஷ்யா மூர்க்கத்தனமாக போரிட்டு வருகிறது. ரஷ்யா செய்து வருவது இனப்படுகொலை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா அழைத்ததன் பேரில் உக்ரைன் அதிகாரிகள் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று 6ஆவது நாளாக தாக்குதலை ரஷ்ய ராணுவம் மேற்கொண்டது. கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திய போது இந்திய மாணவர் கொல்லப்பட்டார்.

கர்நாடகா மாணவர்
கர்நாடகாவை சேர்ந்தவர் நவீன் சேகரப்பா. இவர் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழக்கில் 4 ஆவது ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். அவருக்கு வயது 20. இதுகுறித்து நவீனுடன் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் ஸ்ரீதன் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், நவீன் இன்று காலை உக்ரைன் நேரப்படி 10.30 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.

மளிகை கடை முன்பு
ஒரு மளிகைக் கடை முன்பு வரிசையில் காத்திருந்த போது அங்கிருந்த மக்கள் மீது ரஷ்யா ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அப்போது நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் எங்கிருக்கிறது என தெரியவில்லை. எங்களால் மருத்துவமனைக்கும் சென்று பார்க்க முடியவில்லை என்றார்.

கார்கிவ் நகரம்
கார்கிவ் நகரம் ரஷ்ய எல்லையிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த நகரம் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நீடித்து வந்தது. இங்கு ஏராளமான இந்திய மாணவர்கள் தங்கி மருத்துவம் படித்து வருகிறார்கள். உணவு, குடிநீர் வாங்க கடைகளை திறக்கும்நேரத்தில் வரிசையில் காத்திருக்கும் போது ரஷ்ய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications