கருப்பு புகை வெளியேற்றம்! புதிய போப் ஆண்டவர் தேர்வு முதல் நாளில் முடிவு இல்லை..அடுத்து என்ன நடக்கும்
வாடிகன்: புதிய போப் யார் என்பதை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக நேற்று சிஸ்டைன் சிற்றாலயத்தில் கார்டினல் கான்கிளேவ் தொடங்கியது. 133 கார்டினல்கள் கூடிய நிலையில், போப் ஆண்டவர் தேர்வு முறையில் முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனை தெரிவிக்கும் விதமாக மரபு படி கார்டினல்கள் எழுதி வைத்திருக்கும் பேப்பர்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்பட்டது.
கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். கடந்த 12 ஆண்டுகளாகப் போப் பதவியில் இருந்தவர் போப் பிரான்சிஸ் ஈஸ்டர் தினத்திற்கு மறுநாள் உயிரிழந்தார். போப் பிரான்சிஸ் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மக்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

புதிய போப் யார்?
போப் பிரான்சிஸ் உடலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்பட உலக தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். போப் பிரான்சிஸ் உடல் கடந்த 26 ஆம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டடது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
இதற்காக உலகமெங்கிலும் இருந்து வாடிகனில் குவிந்திருந்த கார்டினல் எனப்படும் கர்தினால்கள் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினர். மேலும் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் (கர்தினால் மாநாடு) நடைபெறும் சிஸ்டைன் சிற்றாலயத்தில் முன்னேற்பாடு பணிகளும் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நேற்று சிஸ்டைன் சிற்றாலயத்தில் கார்டினல் கான்கிளேவ் தொடங்கியது.
எப்படி தேர்வு செய்யப்படுவார்?
இதில் 80 வயதுக்கு உட்பட்ட 133 கார்டினல்கள் கூடினர். அவர்கள் தங்களுக்கு உள்ளேயிருந்து ஒருவரை அடுத்த போப் ஆண்டவராக தேர்வு செய்கிறார்கள். புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படும் வரை அவர்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்காக அவர்களது செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டும், அவர்களை எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.
பின்னர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து சிற்றாலயத்தில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியது. கார்டினல்கள் வாக்குச்சீட்டில் புதிய போப் ஆண்டவராக தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் கார்டினலின் பெயரை, தேர்வு செய்து எழுதி வைப்பார்கள். அந்த சீட்டு ஆலய பீடத்தின் முன்பாக போடப்படும்.
89 வாக்குகள் பெறுபவர்
தேர்வுக்குழுவில் உள்ள 133 கார்டினல்களும் வாக்களித்த பிறகு இந்த சீட்டுக்கள் எண்ணப்படும். இதில் 3-ல் 2 பங்கு ஆதரவு அதாவது 89 வாக்குகள் பெறும் கார்டினல் புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுவார். ஆனால் போப் ஆண்டவர் தேர்வு முறையில் முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனை தெரிவிக்கும் விதமாக மரபுபடி கார்டினல்கள் எழுதி வைத்திருக்கும் பேப்பர்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் புதிய போப் ஆண்டவர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யப்படும் வரை அதாவது பெரும்பான்மை கிடைக்கும் வரை வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெறும்.
வெண்புகை வெளியானால் தான்
புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் வெண்புகை மூலம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும். புதிய போப் ஆண்டவர் பதவிக்கான போட்டியில், இத்தாலிய கார்டினல் பியட்ரோ பரோலின், பிலிப்பைன்ஸ் கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டேகிள், ஹங்கேரிய கார்டினல் பீட்டர் எர்டோ உள்ளிட்டோர் உள்ளனர். இவர்களில் ஒரு கார்டினல் தேர்வாக வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. புதிய போப் யார் என்பதை அறிந்து கொள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications