காஷ்மீரை வைத்து சீண்டும் பாகிஸ்தான்.. வாய்ச்சவடால் விட்ட ராணுவ தளபதி.. மூக்குடைக்கும் இந்தியா
இஸ்லாமாபாத்: காஷ்மீர் என்பது பாகிஸ்தானின் கழுத்து நரம்பு போன்றது. இந்த காஷ்மீரை எந்த சக்தியாலும் பாகிஸ்தானிடம் இருந்து பிரிக்க முடியாது. காஷ்மீர் மக்களுக்கு எப்போதும் பாகிஸ்தான் ராணுவம் துணை நிற்கும் என்று பேசி விவாதத்தை கிளப்பி உள்ளார் அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர். இந்நிலையில் அவருக்கு இந்தியா பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது.
நம் நாட்டின் ஒருபகுதியாக ஜம்மு காஷ்மீர் உள்ளது. இந்த ஜம்மு காஷ்மீருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருகிறது. காஷ்மீரின் ஒருபகுதி பாகிஸ்தானில் உள்ள நிலையில் நம்மிடம் உள்ள காஷ்மீருக்கும் தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.

அதோடு பயங்கரவாதிகளை அனுப்பி காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது. ஆனால் எல்லையில் நம் ராணுவ வீரர்கள் கொடுக்கும் பதிலடியாக தற்போது காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறைந்துள்ளது.
இந்நிலையில் தான் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசீம் முனீர் வன்மத்தை கக்கி உள்ளார். அதாவது இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டு பாகிஸ்தான் வாழ் மக்களுக்கான முதல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அசீம் முனீர் பங்கேற்றார். அப்போது அவர் காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடி இந்தியா மீது விஷத்தை கக்கினார்.
இந்த மாநாட்டில் அசீம் முனீர் கூறுகையில், ‛‛காஷ்மீர் என்பது பாகிஸ்தானுக்கு கழுத்து நரம்பு போன்றது. இதுதான் தலையையும், இதயத்தையும் இணைக்கிறது. எந்த சக்தியாலும் காஷ்மீரை பாகிஸ்தானிடம் இருந்து பிரிக்க முடியாது. காஷ்மீர் மக்களுக்கு எப்போதும் பாகிஸ்தான் ராணுவம் துணை நிற்கும். பாலஸ்தீனத்தின் காசாவிற்காக காஷ்மீர் மக்களின் இதயம் துடிக்கிறது. காசாவை காஷ்மீர் மக்கள் விட்டு கொடுக்கவில்லை. பாலஸ்தீனியர்களுக்கான காஷ்மீர் மக்கள் ஒற்றுமையை வெளிக்காட்டினர்'' என்றார்.
மேலும் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபற்றி அசீம் முனீர் பேசுகையில், ‛‛பயங்கரவாத அமைப்பினர் எத்தனை தலைமுறையை கடந்தாலும்கூட பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் பலுசிஸ்தான் என்பது வெறுமனே நாட்டின் ஒரு பகுதி என்பது இல்லை. அது பாகிஸ்தானின் பெருமைகளில் ஒன்றாகும். பாகிஸ்தான் மக்கள் எப்போது ராணுவத்தின் பின்னணியில் நிற்கின்றனர். இதனால் எங்களுக்கு எந்த சவாலும்இல்லை. அதேவேளையில் பாகிஸ்தானின் எதிரிகள் பயங்கரவாதிகளை வைத்து நாட்டின் எதிர்காலத்தை சீர்குலைத்து விடலாம் என்று நம்புகின்றனர். அது ஒருபோதும் நடக்காது'' என்றார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஏனென்றால் ஜம்மு காஷ்மீர் என்பது நம் நாட்டுக்கு சொந்தமான பகுதியாகும். காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இப்படியான சூழலில் நம் வசம் உள்ள நமக்கு சொந்தமான காஷ்மீருக்கு உரிமை கொண்டாடி உள்ளார் இந்த பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசீம் முனீர். மேலும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இப்படி காஷ்மீருக்கு உரிமை கொண்டாடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பல பேர் காஷ்மீருக்கு உரிமை கொண்டாடி நம் நாட்டிடம் மூக்கு உடைந்து போனது தான் மிச்சம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications