90% பேர் உயிரிழப்பு.. WHO கூட எச்சரிக்கை விடுத்தாச்சு.. ஆனாலும் எபோலாவுக்கு வேக்சின் இல்லை.. ஏன்?
பிரஸ்ஸாவில்லே: காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் அசுர வேகத்தில் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பை, உலக சுகாதார அமைப்பு மே 16ம் தேதி பொதுச் சுகாதார அவசரநிலையாக அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தளவுக்கு நிலைமை மோசமானாலும் கூட எபோலாவுக்கு இதுவரை தடுப்பூசி இல்லை என்பது பலருக்கும் தெரியாது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தற்போது காங்கோ மற்றும் உகாண்டாவில் பரவி வரும் எபோலா பாதிப்பிற்கு பண்டிபுஜியோ (Bundibugyo - BVD) என்ற ஆபத்தான திரிபு தான் முக்கியக் காரணமாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்த பண்டிபுஜியோ பிரிவுக்கு எதிராக உலகளவில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட அல்லது உரிமம் பெற்ற தடுப்பூசிகள் எதுவுமே கிடையாது. இந்த வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 50% பேர் உயிரிழந்துவிடுவார்கள். சில குறிப்பிட்ட திரிபு பாதிக்கப்பட்டால் 90% வரை உயிரிழப்பு ஏற்படும். இந்தளவுக்கு தீவிரமான எபோலாவில் ஏன் இந்த ஒரு திரிபுக்கு மட்டும் வேக்சின் இல்லை என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது..

முதல் காரணம்- புதிய திரிபு
முதலில் உலகில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 'எர்வெபோ' போன்ற புகழ்பெற்ற எபோலா தடுப்பூசிகள், ஜைர் என்ற முற்றிலும் வேறுபட்ட எபோலா பிரிவைக் குறிவைத்துத் தயாரிக்கப்பட்டவை ஆகும். ஆனால், தற்போது பரவி வரும் பண்டிபுஜியோ பிரிவு மரபணு ரீதியாக ஜைர் பிரிவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனவே, பழைய தடுப்பூசிகளைப் போட்டாலும் அது பண்டிபுஜியோ வைரஸை உடலிலுள்ள ஆன்டிபாடிகள் அடையாளம் காண வேக்சின் உதவாது. பழைய தடுப்பூசியை ஒரு தற்காலிகத் தீர்வாகப் பயன்படுத்தலாமா எனப் பரிசோதித்த நிபுணர்கள், அது வெறும் 50% மட்டுமே பலன் தரும் என எச்சரித்துள்ளனர். எனவே, முதல் ஆப்ஷன் அவுட்!
இரண்டாவது காரணம்- நிதி இல்லை
அடுத்து ஒரு நோய்க்கான தடுப்பூசி ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டுமானால், அதன் வரலாற்றுப் பாதிப்பு அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த 2026 அவசரநிலைக்கு முன்பாக, பண்டிபுஜியோ பிரிவு மனித வரலாற்றிலேயே வெறும் இரண்டு முறை மட்டுமே (2007 மற்றும் 2012ல்), அதுவும் மிகச் சிறிய அளவில் பதிவாகியிருந்தது. கடந்த 14 ஆண்டுகளாக இந்த வைரஸால் ஒரு பாதிப்பு கூட ஏற்படவில்லை. இதனால் சர்வதேச ஆராய்ச்சி நிதிகள் அனைத்தும் மார்பர்க் வைரஸ் மற்றும் ஜைர் பிரிவை நோக்கியே திருப்பிவிடப்பட்டன. இதன் காரணமாகவே இப்போது பண்டிபுஜியோ வைரஸுக்கு நம்மிடம் வேக்சின் இல்லை.
மூன்றாவது காரணம்- 9 மாதங்கள்
அதேபோல பண்டிபுஜியோ பிரிவிற்கான சோதனை முறைத் தடுப்பூசி மாதிரிகள் (mRNA தொழில்நுட்பம் உட்பட) ஆய்வகங்களில் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. ஆனால், அவை இன்னும் மருத்துவப் பரிசோதனைகளைக் கடந்து வரவில்லை. தற்போது அவசரநிலையைக் கருத்தில் கொண்டு, மனிதப் பரிசோதனைகளை மின்னல் வேகத்தில் முடுக்கிவிட ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், அப்படி நடந்தாலும் கூட புதிய தடுப்பூசி டோஸ்களைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரக் குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது.
4வது காரணம்- யாரும் எதிர்பார்க்கல
கடைசியாக இந்த அரிய வகை வைரஸின் திடீர் பாய்ச்சல் சர்வதேச மருத்துவ உலகத்தையே நிலைதடுமாறச் செய்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சமீபகாலமாக உலகில் நிலவும் பல்வேறு பதற்ற நிலை காரணமாக வேக்சினுக்கு கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. இந்த நிதி கட்டுப்பாடு காரணமாக, அவசரக்கால மருத்துவத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், புதிய தடுப்பூசிகளை வேகமாக உற்பத்தி செய்வதிலும் கடுமையான தடைகள் நீடிக்கிறது. இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
கொரோனா காலத்திலும் கூட நாம் மிக தாமதமாகவே வேக்சின் நோக்கித் திரும்பினோம். அதை தவறை எபோலாவுக்கும் செய்தால் அது பேரழிவை ஏற்படுத்தும். எனவே, சர்வதேச சமூகம் முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications