இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வராது.. காரணம் இதுதான்! பாகிஸ்தானின் மாஜி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தானுடன் எந்த போரும் நடக்காது. ஆனால் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயித் யூசுப் பரபரப்பான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் குண்டு பாய்ந்து பலியாகினர். இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு தான் பொறுப்பேற்று உள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. விரைவில் பாகிஸ்தான் மீது நம் படை வீரர்கள் தாக்குதல் நடத்துவார்கள். இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானும் நம் மீது பதில் தாக்குதலை நடத்தும். இதனால் மோதல் வலுத்து போராக மாறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இந்தியா தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும். அணுஆயுதத்தை கையில் எடுப்போம். அணுஆயுதத்தை நாங்கள் வெறும் காட்சி பொருளாக வைக்கவில்லை. இந்தியா தாக்கினால் பதிலுக்கு அணுஆயுத தாக்குதலை நடத்துவோம் என்று தொடர்ந்து பாகிஸ்தான் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரிய போர் எதுவும் இருக்காது. ஆனால் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசில் 2021-2022ம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், அதற்கு முன்பாக அவர் இம்ரான் கானின் தனிப்பட்ட ஆலோசகராகவும் செயல்பட்டார். தற்போது லாகூரில் வசித்து வரும் மொயீத் யூசுப் தனியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக மொயீத் யூசுப் கூறியதாவது: "இந்தியாவும் பாகிஸ்தானும் நீண்ட காலமாக பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க இன்னும் வழி பிறக்கவில்லை. இதுதான் முதன்மையான பிரச்சனையாக உள்ளது. நெருக்கடி காலக்கட்டத்தில் இருநாடுகளும் மூன்றாம் நபரை நம்பி வருகின்றனர்.
இருநாடுகள் இடையேயான நெருக்கடியை கட்டுப்படுத்தவும், தணிக்கவும் மூன்றாவது நாடு உதவும் என்று இருதரப்பும் நம்புகிறது. தற்போது இந்தியா பழைய யுக்தியை கையில் எடுத்துள்ளதாக நினைக்கிறேன். மேலும் வரலாற்று ரீதியாக பார்த்தால் பாகிஸ்தான், இந்தியா ஆகியவை ஒன்றையொன்று பழிவாங்கி வருகின்றனர். இந்த முறையும் அதுவே நடக்கிறது. இதில் பிரச்சனை உள்ளது.
தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகளின் தலைவர்கள் இந்தியாவை ஆதரிக்க முன்வரவில்லை. நடுநிலை தன்மை மற்றும் கருத்து தெரிவிக்காமல் அவர்கள் உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட சில நாட்களுக்கு முன்பு இருநாடுகளுக்கான பிரச்சனையை அவர்களே பேசி முடித்து கொள்வார்கள் என்று கூறி ஒதுங்கிவிட்டார்.
அதுமட்டுமின்றி இருநாடுகள் இடையே போர் ஏற்படுமா? என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது. ஆனால் பெரிய போர் என்பது இருக்காது. ஆனால் இந்தியா பாகிஸ்தானை தாக்கலாம். உடனடி தாக்குதல் என்பது காலம் கடந்துவிட்டது. தற்போது இந்தியா நாடுகளின் ராணுவம், தளவாடங்கள் குறித்து உளவுத்துறை மூலம் தகவல்களை சேகரிக்கலாம். அதன்பிறகு இந்தியாவின் தாக்குதல் நடத்தலாம் என்பதால் அதனை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications