நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல; அதன் கொள்கைகளைத்தான் எதிர்க்கிறேன்: இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: நான் இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ எதிரானவன் அல்ல, ஆனால் அவற்றின் கொள்கைகளைத் தான் எதிர்க்கிறேன் என தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும்,பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் அந்த நாட்டின் முன்னணி நாளிதழான எக்ஸ்பிரஸ் டிரிபியூனுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
அதில், அவர் ‘தான் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரானவன் அல்ல. ஆனால், அவர்களின் கொள்கைகளைத் தான் எதிர்க்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து அப்பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது...

பேச்சுவார்த்தை...
ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்புகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேநேரம் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் அரசு பேச்சு நடத்துவதை வலுக்கட்டாயமாகத் தடுக்கிறது. ஏற்கனவே 3 முறை அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா சீர்குலைத்திருக்கிறது.

சீர்குலைக்கும் செயல்....
இப்போது 4-வது முறையாக அமைதிப் பேச்சை தடுத்து நிறுத்தியுள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் பாகிஸ்தான் ஊடகங்கள் சரியான நேரத்தில் குரல் எழுப்பாமல் மெளனம் சாதிக்கின்றன.

ஆணவப் போக்கு....
அமெரிக்காவின் ஆணவப் போக்கு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதேநிலை தொடருமானால் வருங்காலத்தில் அமெரிக்காவை யாருமே மதிக்க மாட்டார்கள்.

முஷரப் தான் காரணம்....
முன்னாள் அதிபர் முஷாரப் நாட்டை படுபாதாளத்துக்கு தள்ளிவிட்டுவிட்டார். அதன் தீய பலன்களை பாகிஸ்தான் ராணுவமும் மக்களும் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாபெரும் போராட்டம்...
எங்கள் கட்சி பாகிஸ்தானின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தால் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்த அமெரிக்கா துணிந்திருக்காது. அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து பெஷாவரில் வரும் 20-ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

கண்டிக்கத்தக்கது....
எல்லையில் அப்பாவி பழங்குடியின மக்கள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் தொடர்கிறது. அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் இயக்கத் தலைவர் ஹசிமுல்லா மெஹ்மூத் கொல்லப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.

கொள்கைகளுக்கு எதிரானவன்....
நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல, அதன் கொள்கைகளுக்குதான் எதிரானவன் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

எந்தக் கொள்கைகள்....
ஆனால், இந்தியாவின் எந்தக் கொள்கைகளை அவர் எதிர்க்கிறார் என்பதை அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications