ஈரானை நெருங்கிய ஆபத்து.. அமெரிக்கா அனுப்பிய ராட்சசன்.. பணிய வைக்க டிரம்ப் எடுத்த அதிரடி
தெஹ்ரான்: ஈரானின் அணுஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை முடக்கும் வகையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஈரான் - அமெரிக்கா இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் வரும் 19ம் தேதி 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கவும் தயங்கமாட்டேன் என்று டொனால்ட் டிரம்ப் வார்னிங் கொடுத்துள்ளார். இதற்கிடையே தான் தற்போது ஈரானை நோக்கி அமெரிக்காவின் இன்னொரு விமானம் தாங்கும் போர்க்கப்பல் விரைந்துள்ளது. இது ஈரானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா உடனான மோதலால் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அணுசக்தி திட்டம் என்ற பெயரில் அணுஆயுதம் தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது.

பொதுவாக அணுஆயுதம் தயாரிக்க வேண்டும் என்றால் செறிவூட்டப்பட்ட 90 சதவீதம் தூய்மையான யுரேனியம் வேண்டும். தற்போது ஈரான் செறிவூட்டப்பட்ட 60 சதவீத தூய்மையான யுரேனியத்தை கொண்டுள்ளது. மேலும் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் தூய்மைப்படுத்தும் பணியை தொடர்ந்து ஈரான் மேற்கொண்டு வருகிறது.
இது அணுஆயுத பரவல் சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. இதனை காரணம் காட்டி ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது. அணுசக்தி திட்டம் என்ற பெயரில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஈரானுக்கு டிரம்ப் கடிதம் எழுதினார். முதலில் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்தது. அதன்பிறகு மறைமுக பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒப்புக்கொண்டது.
இதையடுத்து கடந்த 12ம் தேதி இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை என்பது நடந்தது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது. அமெரிக்கா சார்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்ஃகாப் மற்றும் ஈரான் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோர் பங்கேற்றனர். ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் மத்தியஸ்தம் செய்தார். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடந்ததாக இருநாடுகளும் அறிவித்தன. ஆனாலும் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையே தான் 2ம் கட்ட பேச்சுவார்த்தை என்பது இத்தாலி தலைநகர் ரோமில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது ஈரான் உடன்பாட்டு வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்க அமெரிக்கா தயாங்காது என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது ஈரானுக்கு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் ஈரானுக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் அமெரிக்கா அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி விமானம் தாங்கும் போர்க்கப்பல்கள் ஈரான் அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா தனது யுஎஸ்எஸ் ஹாரி ட்ரூமன் என்ற போர்க்கப்பல் மத்திய கிழக்கு பிராந்திய கடலில் நிலைநிறுத்தி உள்ளது. இது ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி அமைப்பு மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு அடுத்தப்படியாக யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் ஈரானையொட்டி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த போர்க்கப்பல் அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. பாரஷீக வளைகுடா ( பெர்ஷியன் கல்ப்) நோக்கி விரைந்து பயணிக்கும் வகையில் யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் போர்க்கப்பல் தயாராக உள்ளது. இது ஈரானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஏமன் ஹவுதி மீது ட்ரூமன் போர்க்கப்பல் தாக்குதல்நடத்தியது. இதன் அடுத்தக்கட்டமாக யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் விமானம் தாங்கும் போர்க்கப்பல் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் இருந்து போர் விமானங்கள் எளிதாக பறந்து ஈரானை மின்னல் வேகத்தில் தாக்க முடியும். இதன்மூலம் ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் முக்கிய மெசேஜை அனுப்பி உள்ளார். அமெரிக்கா நினைத்தால் ஈரானை எளிதாக தாக்க முடியும். குறிப்பாக அணுசக்தி திட்டங்களுக்கான உள்கட்டமைப்புகளை நோக்கி குறிவைத்து அழிக்க முடியும். இதனால் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும். வரும் 19 ம்தேதி இத்தாலி தலைநகர் ரோமில் நடக்கும் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். என்பதை மறைமுகமாக கூறும் வகையில் டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications