தீவிரவாதிகளுக்கு அணுகுண்டு மூலப்பொருள் விற்பனை.. பின்னணியில் ரஷ்யா?
மாஸ்கோ: அணுகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்களான சீசியம், யுரேனியம் போன்றவை ரஷ்யாவில் இருந்து கடத்தி வரப்பட்டு, தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்படும் தகவல் அம்பலமாகியுள்ளது. முன்னாள் சோவியத் யூனியனை சேர்ந்த மால்டோவா நாட்டில்தான் இந்த ரகசிய வியாபாரம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மால்டோவா
அணுகுண்டு தயாரிக்க தேவைப்படும் முக்கியமான மூலப்பொருட்கள் சீசியம் மற்றும் யுரேனியம். இதை மால்டோவா நாட்டிற்குள் பல இடங்களில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்றுவருகின்றன சில கும்பல்கள்ல். ரஷ்யாவில் இருந்துதான் இந்த மூலப்பொருள் மால்டோவா நாட்டுக்குள் வந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

தீவிரவாதிகள் குறி
இதை விற்பனை செய்யும் ஏஜென்டுகள், தீவிரவாதிகளை தேடுகிறார்கள். அதிலும், குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளோருக்கு அதை தர அவர்கள் தயாராக உள்ளனர். அமெரிக்கர்களை தாக்க வேண்டும் என்பதே இதன் பின்னணியிலுள்ள நோக்கமாகும்.

ரஷ்யாவுடன் நல்ல உறவில்லை
ரஷ்யாவுக்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் உள்ள எதிர்மறை உறவால், ரஷ்யாவின் உதவியுடன் இந்த சீசிய மற்றும் யுரேனிய விற்பனையை தடுக்கச் செய்யும் முயற்சியை மேலை நாடுகளால் மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

4 முறை தடுத்துள்ளது
2010 முதல் இதுவரை, 4 முறை, அணு மூலப்பொருள் விற்பனையை மால்டோவா காவல்துறை முன்கூட்டியே தடுத்துள்ளது. 2010ம் ஆண்டு 1.8 கிலோ யுரேனியம் மூலப்பொருள், பறிமுதல் செய்யப்பட்டது. 2011ல், 1 கிலோ யுரேனியத்தை விற்பனை செய்ய முயன்ற, 6 பேர் கைது செய்யப்பட்டனர். 32 மில்லியன் யூரோக்களுக்கு அவற்றை விற்பனை செய்ய பேரம் பேசியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

விற்பனை நடந்திருக்குமோ?
உக்ரைன்-மால்டோவா எல்லையில், 2014ம் ஆண்டு, 1.5 கிலோ யுரேனியமும், மால்டோவாவில், 200 கிராம் யுரேனியமும் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதத்தில், சீசியம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை தடுக்கப்பட்ட சம்பவங்கள். கடைசி இரு சம்பவங்களிலும், மூலப்பொருளை ஐஎஸ்ஐஎஸ்சுக்கு அளிக்கவே விற்பனையாளர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். தடுக்கப்பட்ட விற்பனைகள் அம்பலமாகியுள்ளன. தடுக்க முடியாமல் விற்பனைக்குள்ளான மூலப்பொருள் எத்தனை கிலோ என்பது புரியாத புதிர்.












Click it and Unblock the Notifications