ஈரான் இலக்குகளை துல்லியமாக தாக்கிய இஸ்ரேல்.. வீடியோ வெளியிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சகம்!
டெல் அவிவ்: ஈரான் மீது, சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் காரணமாக, மத்திய கிழக்கு முழுவதும் பதற்றமடைந்திருக்கிறது. இந்நிலையில், ஈரான் இலக்குகளை தாக்கியது தொடர்பான வீடியோக்களை இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், நடந்து வரும் இராணுவ நடவடிக்கைகளின் வீரியத்தை உணர்த்தும் முதல் ஆதாரப்பூர்வ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) தனது X பக்கத்தில் ஒரு 15 வினாடி நீள கருப்பு-வெள்ளை வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ, மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளைக் காட்டியது. இது அமெரிக்காவுடன் இணைந்து நடத்தப்பட்ட கூட்டு இராணுவ நடவடிக்கை என்றும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.
ரோரிங் லயன்
ஐடிஎஃப் தகவல்படி, 'ரோரிங் லயன்' என்று பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதல், ஈரான் முழுவதும் நூற்றுக்கணக்கான இராணுவ இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இதனை உறுதி செய்யும் வகையில் ஒரு வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்புத்துறை வெளியிட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என தெஹ்ரான் மிரட்டல் விடுத்தது.
கமேனியின் குடியிருப்பு மீது தாக்குதல்
இதேவேளையில், தெஹ்ரானில் உள்ள அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு வளாகம் அருகே ஏற்பட்ட சேதங்களை செயற்கைக்கோள் படம் ஒன்று வெளிப்படுத்தியது. ஏர்பஸ் நிறுவனத்தால் எடுக்கப்பட்டு, 'தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட இந்தப் படம், அப்பகுதியில் அடர்ந்த கருப்புப் புகை மேகம் எழுந்ததைக் காட்டியது.
ஈரான் வார்னிங்
வளாகத்திற்குள் பல கட்டிடங்கள் இடிந்து கிடந்ததும் படத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், சேதத்தின் அளவு குறித்து ஈரானிய அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களுக்கு 'கடும் பதிலடி' கொடுக்கப்படும் என ஈரானிய அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
பதற்றமான சூழல்
அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, 'ரோரிங் லயன்' மற்றும் 'எபிக் ஃபியூரி' என்ற குறியீட்டுப் பெயர்களில் நடந்த இந்தத் தாக்குதல், ஈரானின் ஏவுகணைத் தயாரிப்பு மையங்கள், இராணுவத் தளங்கள், உச்ச தலைவரின் அலுவலகம் அருகிலுள்ள பகுதிகள் எனப் பல முக்கிய இடங்களை இலக்கு வைத்ததாகத் தெரிகிறது. இந்த காட்சிகள் வெளியானதும், பதிலடி அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ளதால், பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.
இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவராததால், வரும் நாட்களில் மேலும் மோதல்கள் வெடிக்கும் சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications