4.30க்கு இந்தியாவை அடிக்கிறோம்..பாகிஸ்தான் திட்டத்தை காலி செய்த பிரமோஸ்.. புலம்பும் ஷெபாஸ் ஷெரீப்
பாகு: ‛‛கடந்த 10ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு இந்தியாவை தாக்க திட்டமிட்டோம். ஆனால் அதற்கு முன்பாகவே இந்தியா எங்களை நீண்ட தூரம் பாயும் பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் வகை ஏவுகணையால் தாக்கிவிட்டது'' என்று அஜர்பைஜான் போய் புலம்பி உள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானை பந்தாடியது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 3 நாள் மோதல் நடந்தது. 9 ம் தேதி முதல் 10ம் தேதி வரை பாகிஸ்தானின் விமான தளங்கள், ராணுவ முகாம்கள் உள்பட 11 இடங்கள் அழிக்கப்பட்டது.

நம் நாட்டின் தாக்குதலில் அச்சமடைந்த பாகிஸ்தான் சண்டையை நிறுத்த கெஞ்சியது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு நம் நாடு பிரமோஸ் ஏவுகணை வைத்து தாக்கியது. இது தான் பாகிஸ்தானை கதறவிட்டு நம் நாட்டிடம் மண்டியிட வைத்தது. தற்போது எல்லையில் அமைதி திரும்பி உள்ளது.
இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு துருக்கி பெரியளவில் உதவியது. துருக்கி நாட்டின் ட்ரோன்களை தான் நம்மை தாக்க பாகிஸ்தான் பயன்படுத்தியது. இந்த ட்ரோன்களை துருக்கி ஆபரேட்டர்கள் தான் பாகிஸ்தானில் இருந்து இயக்கி உள்ளனர். மேலும் துருக்கி நம் நாட்டின் தாக்குதலை கண்டித்ததோடு, பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று அறிவித்தது. இதனை துருக்கி அதிபர் தையிப் எர்டோகனே நேரடியாக அறிவித்து இருந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி துருக்கி, ஈரானை தொடர்ந்து ஷெபாஸ் ஷெரீப் அஜர்பைஜானுக்கு சென்றார். நாங்கள் அடித்த அடியில் இந்தியா கலங்கவிட்டது என்ற மார்த்தட்டிய பாகிஸ்தான் டோனை மாற்றி பேசியுள்ளது. அதாவது நம் நாட்டிடம் விழுந்த அடியை தாங்க முடியாமல் சரணடைந்ததை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார். குறிப்பாக பிரமோஸ் ஏவுகணையை வைத்து இந்தியா நடத்திய பெரிய தாக்குதலில் பலத்த அடி விழுந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பாக அஜர்பைஜானில் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், ‛‛கடந்த 10ம் தேதி காலை தொழுகை முடிந்த பிறகு ராணுவ தளபதி அசீம் முனீர் தலைமையிலான ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது. காலை 4.30 மணிக்கு Fajr Prayers-க்கு பிறகு இந்தியாவுக்கு பாடம் புகட்ட தயாராக இருந்தோம். ஆனால் அதற்கு முன்பாகவே இந்தியா எங்களை தாக்கிவிட்டது. நீண்டதூர சூப்பர்சோனிக் பிரமோஸ் குரூஸ் வகை ஏவுகணைகளை வைத்து தாக்கியது. ராவல்பிண்டி விமான நிலையம் உட்பட பாகிஸ்தானின் பல இடங்களை குறி வைத்து தாக்கியது. அதன் பிறகு இது பற்றி எனக்கு ராணுவ தளபதி அசிம் முனீர் தகவல் சொன்னார்'' என்று புலம்பி உள்ளார்.
நம் நாட்டில் இருக்கும் ஏவுகணைகளில் மிகவும் முக்கியமானது பிரமோஸ். இந்த ஏவுகணையை நம் நாடு ரஷ்யாவுடன் சேர்ந்து தயாரித்துள்ளது. பாகிஸ்தான் மீது நம் நாடு மொத்தம் 15 பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியது. இந்த ஏவுகணைகள் Su - 30 MKI போர் விமானங்களில் இருந்து துல்லியமாக வீசப்பட்டன.
ராணுவம், விமான தளங்கள் என்று மொத்தம் 11 இடங்கள் குறிவைக்கப்பட்டன. இதில் ராவல்பிண்டியில் உள்ள நுர்கான் விமான தளமும் ஒன்று. இந்த நுர்கான் விமான தளம் என்பது பாகிஸ்தானின் ராணுவ தலைமையகத்தில் இருந்து கல் எறியும் தொலைவில் தான் உள்ளது. இதுதவிர பாகிஸ்தானின் ரபீக், முரித், ரஹிம் யார் கான், சுக்கூர் மற்றம் சுனியன் உள்ளிட்ட ராணுவ தளம், ஸ்கார்டு, போலாரி, ஜேகபாபாத், சர்கோதா உள்ளிட்ட விமானதளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications