எந்த எல்லைக்கும் போக தயாராகி விட்டோம்.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி பகிரங்க எச்சரிக்கை
Recommended Video
இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது சட்டப் பிரிவை இந்திய அரசு ரத்து செய்த ஒரு நாளுக்குப் பின்னர், பாகிஸ்தான் ராணுவம், தனது கோபத்தை காட்டியுள்ளது.
காஷ்மீர் மக்களுக்கு உதவ எந்த அளவிற்கும் செல்ல எங்கள் படைகள் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவத் தலைமை ஜெனரல் கமர் ஜாவித் பஜ்வா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ராஜ்யசபாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானை கடுமையாக கோபப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் அமெரிக்கா, சீனா நாடுகளும், பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை.

துப்பாக்கி சூடு
இதனிடையே, பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் செயல்பட தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் எல்லையில், அத்துமீறி, பாகிஸ்தான் ராணுவம், துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஆக்ஷன் படையினர் இந்தியாவிற்குள் ஊடுருவ முற்பட்டபோது, இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். எனவே, அடுத்த வழிகளை யோசிக்க ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான் ராணுவம்.

உச்சபட்ச அமைப்பு
கார்ப்ஸ் கமாண்டர்கள், மாநாட்டில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி, பஜ்வா பேசிய உரை அதற்கு ஒரு உதாரணம். கார்ப்ஸ் கமாண்டர்கள் என்பது பாகிஸ்தான் ராணுவத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இங்கு காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அங்கு பஜ்வா பேசியதை பாருங்கள்:

துணையாக இருப்போம்
காஷ்மீர் மக்களுக்காகவும், அவர்கள் படும் கஷ்டங்களை போக்கவும், பாகிஸ்தான் ராணுவம் வலிமையாக துணை நிற்கும். நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் நோக்கம் நிறைவேற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளோம். இவ்வாறு கமாண்டர்கள் முன்னிலையில், பஜ்வா ஆவேசமாக பேசியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கீகாரம் இல்லை
இதனிடையே பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையொன்றில், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கையை, முற்றாக புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு நாங்கள் முழு ஆதரவை அளிக்கிறோம். பாகிஸ்தான் என்றுமே, இந்திய அரசியலமைப்பின் 370 மற்றும், 35-ஏ ஆகியவற்றை அங்கீகரித்தது இல்லை. இப்போது அதே அங்கீகாரத்தை புது டெல்லி வாபஸ் பெற்றுள்ளது. இதையும் நாங்கள் ஏற்கவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல்
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த இந்தியாவின் செயல்பாடு, சட்ட விரோதமானது என்று தெரிவித்திருந்தார். காஷ்மீர் விவகாரம், தற்போது இந்தியா, பாகிஸ்தான் நடுவே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications