"தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான்! சொந்த மக்களுக்கும் பாதுகாப்பில்லை!" உள்நாட்டிலேயே கிளம்பிய எதிர்ப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் மூத்த அரசியல்வாதி ஒருவரே அந்நாட்டின் அரசியல் தலைமை மீது மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு என விமர்சித்துள்ள அவர், பாகிஸ்தான் தனது மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டு தீவிரவாதத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் கடந்த பல காலமாகவே தீவிரவாதத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக இந்தியா தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகிறது. அதை பாகிஸ்தான் மறுத்து மறைக்க முயன்றாலும் கூட பல நேரங்களில் பாகிஸ்தான் அம்பலப்பட்டுவிடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. உள்நாட்டிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக மிக கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மிக கடுமையான விமர்சனம்
பாகிஸ்தானின் மூத்த அரசியல்வாதியும், ஜாமியத் உலேமா-இ-இஸ்லாமின் தலைவருமான மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான், தனது சொந்த நாட்டு அரசின் மீதே மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும், அதை ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தோல்வியடைந்த நாடு
பாகிஸ்தானை "தோல்வியடைந்த நாடு" என்று குறிப்பிட்ட ரஹ்மான், தனது மக்களைப் பாதுகாக்க இயலாத நாட்டின் அரசியல் தலைமை மற்றும் புலனாய்வு அமைப்புகள் தீவிரவாதத்தை வளர்ப்பதில் உடந்தையாக இருப்பதாக அவர் விமர்சித்தார். தீவிரவாதிகளை ஒழிப்பதற்குப் பதிலாக பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகள் அதை பயன்படுத்துவதாக விமர்சித்த ரஹ்மான், இதன் காரணமாகவே பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க முடிவதில்லை என்றும் விமர்சனத்தை முன்வைத்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நமது அரசு குற்றங்களைத் தங்கள் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துகிறது. குற்றங்களை ஒழிக்க அவர்கள் எதுவும் செய்வதில்லை. குற்றங்களுக்கு எதிராகக் கொள்கைகளை வகுத்தாலும் அதைச் செயல்படுத்துவதில்லை. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை எனச் சொல்லி சில நடவடிக்கைகளை எடுப்பார்கள். ஆனால், அது சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தப் பெயரளவிலேயே இருக்கும்" என்றார்.

தீவிரவாதத்திற்கு ஆதரவு
ரஹ்மான் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகள் மீது தான் முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு பயங்கரவாதத்தை ஊக்குவித்தும் வருவதாகச் சாடிய அவர், அதேநேரம் வெளியுலகிற்காகத் தீவிரவாதத்தை எதிர்த்துச் செயல்படுவது போல காட்டிக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார்கள், அதனுடன் போராடுகிறார்கள். பஜூர் மற்றும் வஜிரிஸ்தானில் தினமும் தீவிரவாதம் தான் பிரச்சினையாக உள்ளன. தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் எனச் சொல்லி அப்பாவி மக்களை குறிவைக்கிறார்கள். பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.. வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியில் சுமார் 10% வரை தீவிரவாத குழுக்களுக்குச் செல்கிறது.
கனிம வளங்கள்
இப்போது கூட கனிம வளங்களைத் தாரைவார்க்க பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தானின் கனிம வளம் பொதுமக்களின் நலனுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.. வளங்கள் அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்பட்டால் மோசமான தேசிய நெருக்கடி ஏற்படும்" என்று சரமாரியாக விமர்சித்தார்.
அதிகாரக் குவிப்பு
பாகிஸ்தான் அதிகார மையத்தையும் ராணுவத்தையும் விமர்சித்த அவர், "ராணுவம் மற்றும் அரசியல் தலைமையின் கைகளில் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது. இப்போது அதிகாரத்தைப் பெறுவதிலேயே குறிவைத்து அனைவரும் செயல்படுகிறார்கள்.. இங்கு ஒருவரிடம் அதிகாரம் அளவுக்கு அதிகமாகக் குவிக்கப்படுகிறது. அதைக் கேள்வி கேட்டால் உங்களுக்கும் தேச துரோகி முத்திரை குத்தப்படும். பாகிஸ்தான் அரசு மக்களுக்குச் சேவை செய்வதை விட மக்களைக் கட்டுப்படுத்தவே விரும்புகிறது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications