பாகிஸ்தானை பட்டா போடும் துருக்கி.. கராச்சியில் 1000 ஏக்கர் நிலம் ‛கிப்ட்’.. பின்னணி இதுதான்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் மூலமாக அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு, துருக்கி உதவியது. இதன் தொடர்ச்சியாக தான் பாகிஸ்தானில் கராச்சி நகரில் 1000 ஏக்கர் நிலத்தை துருக்கிக்கு ‛ஓசி'க்கு பாகிஸ்தான் வழங்க உள்ளது பெரும் பேசும் பொருளாகி உள்ளது.
பாகிஸ்தானும், துருக்கியும் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகள். இருநாடுகளிலும் சன்னி முஸ்லிம்கள் தான் அதிகம் உள்ளனர். இருநாடுகள் இடையே காலம் காலமாக நல்ல உறவு இருந்து வருகிறது. காஷ்மீர் பிரச்சனை வரும் போதெல்லாம் துருக்கி எப்போதுமே பாகிஸ்தான் பக்கம் தான் நின்று நம் நாட்டை எதிர்க்கும்.

குறிப்பாக பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நம் நாடு தொடங்கி அதிரடியாக ‛அட்டாக்' செய்தது. இதில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம், விமானப்படை தளம், ராணுவதளம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்றது. அப்போது துருக்கி, பாகிஸ்தானுக்கு உதவியது. துருக்கி தனது ட்ரோன்களை பாகிஸ்தான் வழங்கியதோடு, ட்ரோன் ஆபரேட்டர்களையும் கொடுத்தது. இவர்கள் நம் நாட்டின் மீது ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டன. இருப்பினும் நம் முப்படைகளும் அனைத்து ட்ரோன்களையும் வீழ்த்தியது. இதில் பாகிஸ்தானும், துருக்கிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது.
இப்படி பாகிஸ்தான் சிக்கலை எதிர்கொள்ளும் போதெல்லாம் துருக்கி ஓடிப்போய் ஆதரவு தெரிவித்து வருகிறது. இதுவே இருநாடுகள் இடையேயான நட்புக்கு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் தான் துருக்கி நாட்டுக்கு 1000 ஏக்கர் நிலத்தை ஓசிக்கு வழங்க முடிவு செய்துள்ளது பாகிஸ்தான்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் இடையே ஏற்கனவே நடந்த நேரடி சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பிறகு சமீபத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் துருக்கிக்கு சென்று ஏற்றுமதி மண்டலங்களை பார்வை்யிட்டனர். அதேபோல் முதலீட்டாளர்களின் நலனை துருக்கி எப்படி பாதுகாக்கிறது? என்று பார்த்து வந்தனர்.
அதற்கு பிறகே தற்போது பாகிஸ்தான் தனது கராச்சி தொழிற்பூங்காவில் 1,000 ஏக்கரை தாரை வார்த்துள்ளது. அதாவது கராச்சியில் தொழிற்பூங்கா ஒன்று உள்ளது. இங்கு புதிதாக ஏற்றுமதி செயலாக்க மண்டலம் (EPZ or Export Processing Zone) அமைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இங்கு துருக்கி முதலீட்டை ஈர்ப்பதும், இருநாடுகள் இடையேயான வர்த்தகத்தை 5 பில்லியன் டாலர்களாக உயர்த்தும் வகையில் இந்த 1,000 ஏக்கர் நிலம் துருக்கிக்குவழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த மண்டலத்தில் அமையும் துருக்கி நிறுவனங்களுக்கு வரி விலக்கு, குறைந்த விலையில் தண்ணீர் உள்பட பிற வசதிகள் மற்றும் ஏற்றுமதி சலுகைகளை பாகிஸ்தான் வழங்க உள்ளது.
இந்த இடத்தில் துருக்கி ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தை அமைக்கும் பட்சத்தில் அது பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் பயனாக அமையும். ஏனென்றால் கராச்சி ஒரு துறைமுக நகரமாகும். இங்கு துருக்கி நிறுவனங்கள் பல்வேறு தயாரிப்புகளை மேற்கொள்ளும்போது துறைமுகம் வழியாக அதனை எளிமையாக மத்திய ஆசியா மற்றும் அரபு நாடுகளுக்கு பாகிஸ்தானால் ஏற்றுமதி செய்ய முடியும். இது பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கும். அதேபோல் துருக்கிக்கும் இது பெரும் பலனாக இருக்கும். அதாவது துருக்கி நிறுவனங்கள் கராச்சியில் இருந்து பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும்போது ஒரு டன்னுக்கான போக்குவரத்து செலவு 4 ஆயிரம் டாலரில் இருந்து வெறும் ஆயிரம் டாலராக குறையும்.












Click it and Unblock the Notifications