தப்பித்த இம்ரான் கான்.. களமிறங்கும் உச்ச நீதிமன்றம்.. பாகிஸ்தானில் இன்று பரபர விசாரணை - பின்னணி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
பாகிஸ்தானில் நேற்று நடக்க இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி நிராகரித்தார். இதனால் இம்ரான் கான் ஆட்சி கவிழவில்லை.
அங்கு அமைச்சரவை கலைக்கப்பட்டதால், புதிதாக விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கான் பிரதமராக நீடிப்பார்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் இன்று இது தொடர்பான விசாரணை நடத்தப்பட உள்ளது. நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை அந்நாட்டு துணை சபாநாயகர் நிராகரித்ததும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியால் இது தொடர்பாக விளக்கம் கேட்டார். அதோடு உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரிக்க முடிவு செய்தது. தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியால் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நேற்று இது தொடர்பான நோட்டீஸ்களை பல்வேறு தரப்பிற்கு அனுப்பியது.

இம்ரான் கான் பாகிஸ்தான்
ஆளும் கட்சிக்கும், சபாநாயகருக்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும், அந்நாட்டு பாதுகாப்பு துறைக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் நீதிமன்றம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர், அதிபர், சபாநாயகர் அனைவரும் எடுக்கும் முடிவுகள் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு கட்டுப்பட்டதே. உச்ச நீதிமன்ற விசாரணையை எல்லைக்கு உட்பட்டதே என்று தலைமை நீதிபதி நேற்று தெரிவித்தார்.

நீதிமன்றம்
நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா என்று விசாரணை நடத்தப்படும். இதில் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்று விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால் அதற்கு முன்பாக உச்ச நீதிமன்றம் இதை தாமாக விசாரிக்க முன் வந்தது.

விசாரணை
இருப்பினும் இவர்களின் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்து, எதிர்கட்சிகளிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று இது தொடர்பான வழக்குகள் விசாரணை செய்யப்பட உள்ளன. இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை அனைத்து தரப்பும் அமைதி காக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக, பாதுகாப்பு ரீதியாக எந்த பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மூன்று நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது.












Click it and Unblock the Notifications