இந்தியாவின் 69வது சுதந்திர தினம்- சான்பிரான்சிஸ்கோவைக் கலக்கிய “பறை” இசை!
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் மாபெரும் சுதந்திர தின பேரணி நடைபெற்றது. பிரிமாண்ட் நகரின் முக்கிய வீதியின் வழியே இந்த பேரணி சென்றது.
கம்ப்யூட்டர் மென்பொருள் துறையின் தலைநகரமாக திகழும் சிலிக்கான் வேலியில் பெருமளவில் இந்தியர்கள் வசித்து வருவதோடு பல சாதனைகளையும் புரிந்து வருகிறார்கள். வளைகுடா பகுதியில் இருக்கும் பல்வேறு மொழி, ஆன்மிக, சமூக நிறுவனங்கள் மற்றும் இந்தியர்களது வியாபார நிறுவனங்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றன.

வளைகுடா பகுதி தமிழர்கள் சார்பில் சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் அலங்கார வாகனம் ஊர்வலத்தில் சென்றது. தமிழரின் பாரம்பர்ய உடையுடன், தமிழ் தலைவர்கள் வேடமிட்ட சிறுவர்களுடனும், அழகிய அலங்காரத்துடன், தமிழ் பாடல்களை ஒலித்தபடியே ஊர்வலம் சென்றது.
ஊர்வலத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் பறை இசையை வாசித்தபடியே சென்றனர். சாலையின் இரு புறமும் இருந்த மக்கள் மிகவும் விருப்பத்துடன் வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல் பலர் நடனமாடவும் செய்தனர்.வழியெங்கும் இசையை ரசித்த மக்கள் கரகோஷமிட்டனர்.
அதிலும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சில குழந்தைகள் பறையை இசைக்கவும் , நடனமாடவும் கற்று கொள்ள கூட விருப்பம் தெரிவித்தனர். அமெரிக்க மக்களை மொழி, இனம், மதம் தாண்டி ரசிக்க வைப்பதாகவும், கேட்ட உடன் ஆட வைப்பதாகவும் பறை இசை இருந்தது. ஊர்வலம் சென்ற போது ஒரு பகுதியில் சீக்கியர்கள் சுதந்திர தின எதிர்ப்பு கோஷமிட்டதுடன் சீக்கிய படுகொலைக்கு நியாயம் கேட்டும் குரலெழுப்பினர்.
ஜூலை மாதம் வளைகுடா பகுதியில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்சங்க பேரவையின் ஆண்டு விழாவில் பறை இசையில் மயங்கி வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். உலகிலேயே தொன்மையான இசையான பறை இசைக்கு தமிழகத்தில் தான் உரிய இடம் கிடைக்காமல் போனாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது அனைவராலும் போற்ற பட தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications