நடுவானில் விமானி மரணம்... போராடி விமானத்தை ஆரஞ்சு தோட்டத்தில் தரையிறக்கிய பெண்
மாட்ரீட்: விமானத்தை ஓட்டி வந்த கணவர் நடுவானில் மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி கட்டுப்பாட்டு அறை வழிகாட்டுதலின் படி விமானத்தை தரை இறக்கிய பரபரப்புச் சம்பவம் ஸ்பெயின் நாட்டில் நடந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் செவிலே பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் குட்டி விமானம் ஒன்றில் பயணம் செய்தார். விமானத்தைக் கணவரே ஓட்டி வந்தார்.
விமானம் நடுவானில் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, திடீரென கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கணவர் மயக்கம் அடைந்ததால், விமானம் நிலை தடுமாறியது. இதனால் விமானத்தை இயக்கத் தெரியாத மனைவி கலக்கம் அடைந்தார்.
உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டார் மனைவி. அங்கிருந்த அதிகாரியிடம் தனது நிலையை அவர் விளக்கினார். பின்னர், கட்டுப்பாடு அறை அதிகாரியின் வழிகாட்டுதலின் படி, அவரே விமானத்தைத் தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
சுமார் 90 நிமிட பயணத்துக்கு பின் ஒரு வழியாக செவிலே விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்க முயன்றார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆரஞ்சு தோப்பிற்குள் தரையிறங்கியது.
தரையில் மோதியபடி தரையிறங்கியதால் விமானம் கடுமையாக சேதம் அடைந்தது. இதனால், அப்பெண் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால், விமானத்தில் மயங்கிய நிலையில் மீட்கப் பட்ட அவரது கணவர் உயிரிழந்து விட்டார்.
இயக்கத் தெரியாத போதும், 90 நிமிடங்கள் போராடி பெண் ஒருவர் விமானத்தை தரையிறக்கிய சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications