'உங்கள் சாதனையால் இந்தியாவே பெருமை கொள்கிறது..' வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் மற்றும் வெண்கலம் வென்ற ஷரத் குமாரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியச் சார்பில் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 9 போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

2 பதக்கம்
அதில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. உயரம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டிய இந்திய வீரர் மாரியப்பன் வெள்ளி வென்றார். அதேபோல மற்றொரு இந்திய வீரரான ஷரத் குமார் வெண்கலம் வென்றார்.

இந்தியா பெருமை கொள்கிறது
உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற வீரர்களைப் பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாகப் பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "உயர, உயர பறக்கிறார். மிக சிறப்பாக தனது திறமையை மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் வாழ்த்து
அதேபோல வெண்கலம் வென்ற சரத் குமாரையும் பாராட்டி பிரதமர் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "வெண்கலம் வென்று ஒவ்வொரு இந்தியரின் முகத்திலும் புன்னகையைக் கொண்டு வந்துள்ளார் சரத்குமார். அவரது வாழ்க்கை பலரை ஊக்குவிக்கும். அவருக்கு வாழ்த்துக்கள் " என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, ஏற்கனவே கடந்த 2016 பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் அவர் தங்கம் வென்றிருந்தார். தொடர்ந்து 2ஆவது பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications