‛வசுதைவ குடும்பகம்’.. அபுதாபி கோவிலை திறந்ததுமே பிரதமர் மோடி பொறித்த வாசகம்! அர்த்தம் தான் ஹைலைட்
அபுதாபி: பிரதமர் மோடி அபுதாபியில் இன்று முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார். 27 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலை திறந்து வைத்த பிறகு பிரதமர் மோடி உளி, சுத்தியல் உதவியுடன் கல்லில் ‛வசுதைவ குடும்பகம்' என்ற வார்த்தையை பொறித்தார். இந்நிலையில் தான் அதன் பின்னணி அர்த்தம் கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். டெல்லியில் இருந்து நேற்று சிறப்பு விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி நேற்று அமீரகம் சென்றடைந்தார். பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார். ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

அதன்பிறகு இருநாடுகள் உறவு, வர்த்தகம் குறித்து இருதலைவர்களும் பேசினர். அதன்பிறகு அமீரகத்தில் வாழும் இந்தியர்களின் அஹ்லான் மோடி நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி அவர்கள் முன்பு தோன்றி பேசினார்.
இதையடுத்து இன்று மாலையில் அபுதாபி அல் முரக்கா பகுதியில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவில் இது என பெயர் பெற்றுள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய நிலையில் இன்று அவர் நேரில் திறந்து வைத்தார்.
மொத்தம் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட சுவாமி நாராயண் கோவிலை திறந்து வைத்த பிறகு பிரதமர் மோடி பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தார். அதன்பிறகு கோவிலை அவர் சுற்றிப்பார்த்தார். இந்த வேளையில் பிரதமர் மோடி அங்குள்ள கல்லில் பொறித்த வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவ பிரதமர் மோடி உளி, சுத்தியல் உதவியுடன் கோவில் கல்லில் வசுதைவ குடும்பகம் (Vasudhaiva kutumbakam) என்று பொறித்தார். வசுதைவ குடும்பகம் என்பதற்கு சமஸ்கிருத இந்து சமய நூல்களில் ‛உலகமே ஒரே குடும்பம்' என அர்த்தம் வரும். இந்நிலையில் தான் உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே குடும்பம் என்பதை பறைசாற்றும் வகையில் பிரதமர் மோடி இந்த வார்த்தையை எழுதியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த செயல் என்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
மேலும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்த இந்த கோவில் என்பது சுமார் ரூ.700 கோடி மதிப்பீட்டில் 27 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கல் உதவியுடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு அமீரகங்களை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவிலில் தியான அறைகள், கண்காட்சி மையங்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகளும் உள்ளன. இந்த கோவிலில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்கலாம். அயோத்தி ராமர் கோவில் போல் இந்த கோவில் கட்டும் பணிக்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. மேலும் இந்த கோவில் என்பது இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. வரும் 18 ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications