பாகிஸ்தான் பிரதமர் ரூமில் இருந்த போதே.. வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி.. மீட்டிங்கில் விழித்த ஷெரீப்
பெய்ஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, அங்குத் தீவிரவாதத்தைக் கண்டித்துப் பேசினார். குறிப்பாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் அந்த அறையில் இருந்தபோதே, பஹல்காம் தாக்குதல் குறித்துப் பேசினார். பிரதமர் மோடி ஆவேசமாகக் கர்ஜித்த நிலையில், அதற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் ஷெரீப் விழித்துக் கொண்டு இருந்தார்.
பிரதமர் மோடி 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகச் சீனா சென்றுள்ளார். அங்கு தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். டிரம்ப் வரியால் இந்தியா அமெரிக்கா உறவு பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புதின்- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரே கூட்டத்தில் பங்கேற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரதமர் மோடி
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும், தீவிரவாத விவகாரத்தில் எப்போதும் இரட்டை நிலைப்பாடு இருக்கவே கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதல் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் விடுக்கப்பட்ட சவால் என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இருக்கும்போதே
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பு நாடாக இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். தீவிரவாதிகளுக்குத் தொடர்ந்து உதவி வரும் பாகிஸ்தான் தான் பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் ஷெபாஸ் ஷெரீப்பை வைத்துக் கொண்டே பிரதமர் மோடி வெளுத்து வாங்கினார். இதற்கு என்ன சொல்வது என்றே புரியாமல் ஷெரீப் திணறிப் போனார்.
பிரதமர் மோடி பேசி முடித்த கொஞ்ச நேரத்திலேயே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பஹல்காம் தாக்குதலைக் கண்டிப்பதாகவும் அந்த தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறப்பட்டிருந்தது. குறிப்பாக இத்தகைய தாக்குதல்களை நடத்தியவர்கள், திட்டமிட்டவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் என அனைவருமே நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஏன் முக்கியம்
இது இந்தியாவுக்கு ராஜதந்திர ரீதியாகக் கிடைத்த முக்கியமான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் ரூமில் இருக்கும்போதே பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசியதும், அதைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்திலேயே பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து வெளியிடப்பட்ட அறிக்கையும் முக்கியத்துவம் பெறுகிறது.
பிரதமர் மோடி பேச்சு
முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை வளர்ச்சியைத் தடுப்பதாகக் குறிப்பிட்டார். இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக சர்வதேச நாடுகளிடையே ஒற்றுமை தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார். அல்கொய்தாவுக்கு எதிரான போராட்டத்திலும், பயங்கரவாத நிதியைத் தடுப்பதிலும் இந்தியாவின் பங்களிப்பையும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை தான் எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் அடிப்படை. ஆனால், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை இந்தப் பாதையில் நமக்கு இருக்கும் பெரிய சவால்களாகும். பயங்கரவாதம் என்பது ஒரு தனிப்பட்ட நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமில்லை, மனிதக்குலத்திற்கே சவால்.. பயங்கரவாதம் தொடர்பான விஷயத்தில் எந்தவித இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளப்படாது. சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நாம் பார்த்தோம். அந்த நேரத்தில் எங்களுடன் நின்ற அனைத்து நட்பு நாடுகளுக்கும் நன்றி" என்றார்.












Click it and Unblock the Notifications