சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. 7 ஆண்டுகளில் இதுவே முதல்முறை! டிரம்ப் வரிக்கு நடுவே இது ஏன் முக்கியம்?
பெய்ஜிங்: பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்கு முதல்முறையாகச் சீனாவுக்குச் சென்றுள்ளார். தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இருநாள் பயணமாகச் சீனா சென்றுள்ளார்.
இந்தியா சீனா இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வளவு சிறப்பானதாக இல்லை. கல்வான் மோதலுக்குப் பிறகு இரு நாட்டு உறவு மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு எடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தொடர்ந்தே நிலைமை மெல்லச் சீரானது. இப்போது கடந்த சில மாதங்களாக இரு தரப்பும் மெல்ல நிலைமையைச் சீராக்க முயன்று வருகிறது.

இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடி இப்போது சீனாவுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இருநாள் பயணமாகச் சீனா சென்றுள்ளார். நரேந்திர மோடி கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் முதல்முறையாகச் சீனா சென்றுள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த வருடாந்திர உச்சி மாநாட்டில், 10 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். இந்தியா சீனா உறவுகள் கடந்த சில மாதங்களாக மேம்பட்டு வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாகப் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுவார் என்றும் கூட எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்ததால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில், இந்த உச்சி மாநாடு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications