ஊழல்வாதிகளைக் கல்லைக் கட்டி கடலில் போட வேண்டும்: போப் பிரான்சிஸ் ஆவேசம்
வாடிகன் நகரம்: ஊழல் செய்பவர்களின் கழுத்தில் பாறாங்கல்லைக் கட்டி கடலில் தூக்கி எறிய வேண்டும் என பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் போப் பிரான்சிஸ்.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின், 265வது போப் ஆண்டவராக பதவி வகித்த போப் 16ம் பெனடிக்ட் மூப்பு காரணமாக பதவி விலகினார். அதனையடுத்து அர்ஜென்டினாவின் முன்னாள் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ (76), 266-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் போப் பிரான்சிஸ் என அழைக்கப் படுகிறார்.
இந்நிலையில் நேற்று முந்தினம் வாடிகன் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தோன்றி சொற்பொழிவு ஆற்றினார் போப் பிரான்சிஸ். அப்போது வாடிகன் அரண்மனை மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களில் பெருகி வரும் ஊழல்களை பற்றி விமர்சிக்கும் வகையில் அவர் பேசினார்.
மேலும், இது குறித்து அவர் கூறியதாவது....

ஏமாற்று வேலை...
பைபிளின் புதிய ஏற்பாட்டில் உள்ள லூக்கா அத்தியாயத்தில் ஏமாற்றுவேலை இருக்கும் இடத்தில் கடவுளின் தூய ஆவி இருக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

கடலில் போடுங்கள்....
எனவே தான், ஏமாற்றுக் காரர்களை பூமியில் விட்டுவைப்பதைக் காட்டிலும் அவர்களின் கழுத்தில் மைல் கல்லை கட்டி கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று இயேசு கிருஸ்து கூறியுள்ளார்.

இரட்டை நிலைப்பாடு....
நாட்டையும், மக்களையும் வஞ்சித்து ஊழலின் மூலம் பணத்தை கொள்ளையடித்து அதே பணத்தை தேவாலயங்களுக்கு நன்கொடையாக அளிப்பவர்கள் இரட்டை நிலைப்பாடு கொண்ட வாழ்க்கையை வாழ்பவர்கள்.

இயேசு கூறியது போல்...
அவர்கள் பாவிகள்.இயேசு கிறிஸ்து கூறியது போல்,அவர்கள் கழுத்தில் பாறாங்கல்லை கட்டி கடலில் தூக்கி எறிய வேண்டும்.

வெளியில் பளபளப்பு...
ஊழல் செய்பவர்கள் எல்லாம் வர்ணப்பூச்சு செய்யப்பட்ட கோபுரத்துக்கு இணையானவர்கள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு பளபளப்பாக தெரியலாம். ஆனால், உள்ளே செத்துப் போன எலும்புகளாகவும்,சிதிலமடைந்தும் தான் அவர்கள் காணப்படுவார்கள்.

கண்ணியமற்றவர்கள்....
ஊழலின் மூலம் தங்களது குடும்பங்களை பராமரிப்பவர்கள் கண்ணியத்தை இழந்தவர்கள். குடும்பத்தாருக்கு அசுத்த உணவை அளிப்பவர்கள்.

ஊழல் ஒரு போதை...
ஊழல் என்பது போதைப் பழக்கத்தை போல் கொடியது. ஊழல் செய்யாமல் வாழ முடியாத சூழ்நிலையை அது உருவாக்கி விடும்.

அவப்பெயர் மட்டுமே...
ஊழல் செய்வதன் மூலம் கண்ணியத்தை இழக்கும் இவர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை தங்களுடன் கொண்டு செல்வதில்லை. கண்ணியத்தை இழந்தவர்கள் என்ற அவப்பெயரை மட்டும்தான் கொண்டு செல்கிறார்கள்' என இவ்வாறு அவர் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications