களமிறங்கிய கத்தார்.. முன்னேற்றம் கண்ட பேச்சுவார்த்தை! இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் சாத்தியமாகிறதா?
காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 21வது நாளாக இன்றும் தாக்குதலை நீடித்திருக்கும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து கத்தார் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்த யூதர்கள் தங்களுக்கு என சொந்தமாக ஒரு நாட்டை உருவாக்க முயன்றனர். இதற்கு பின்னால் பிரிட்டனும், அமெரிக்காவும் உதவ, பாலஸ்தீனம் இரண்டாக்கப்பட்டது. ஒரு பாதி பாலஸ்தீனமாகவும், மற்றொரு பாதி இஸ்ரேலாகவும் உருவானது. அதன் பின்னர் மீதியிருந்த பாலஸ்தீன நிலத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமிக்க தொடங்க, அதற்கு எதிராக பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் உருவானது. அதில் ஒன்றுதான் ஹமாஸ். இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஹமாஸ் போன்ற அமைப்புகள் ஆயுத போராட்டத்தை நடத்த, இஸ்ரேல் அதற்கு பதிலடி கொடுக்கிறேன் என பாலஸ்தீன மக்களை கொன்று குவித்தது.

இப்படியாக கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணைகளை கொண்டு பயங்கரவாத தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவ்வளவுதான் மத்திய தரைக்கடல் பகுதியில் போர் தீ பரவிக்கொண்டது. 7ம் தேதி தொடங்கி இன்று வரை இஸ்ரேல் பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
எந்த அளவுக்கு தீவிரம் எனில், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஓராண்டுக்கு வீசிய குண்டுகளை, இஸ்ரேல், காசா மீது ஒரே வாரத்தில் வீசிவிட்டது. இந்த அளவு தீவிரமான தாக்குதல் காரணமாக இதுவரை 2,913 குழந்தைகள் உட்பட 7,028 பேர் உயிரிழந்துள்ளனர். 18,484 பேர் படுகாயமடைந்துள்ளனர். மறுபுறம் காசா மக்களுக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது.
பொதுமக்கள் மட்டுமல்லாது ஐநாவின் செயற்பாட்டாளர்கள் 35 பேரும், பத்திரிகையாளர்கள் 32 பேரும் இஸ்ரேலின் குண்டுவீச்சில் பலியாகியுள்ளனர். போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா, சீனா, அரபு நாடுகள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும், சீனாவும் மேற்கொண்ட முயற்சிகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஐநாவுக்கு வெளியே கத்தார் போர் நிறுத்தம் தொடர்பாக சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
கத்தார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில்தான் சமீப நாட்களாக ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதேபோல உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் கோரியுள்ளது. இதற்கு பதிலாக காசாவுக்குள் இஸ்ரேலிய பாதுகாப்புப்படை நுழைய கூடாது என ஹமாஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் காசாவுக்குள் ஊடுருவ இருந்த இஸ்ரேலிய படையின் புதிய திட்டத்திற்கு அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு ஒப்புதல் அளிக்காமல் தவிர்த்திருக்கிறார்.
பேச்சுவார்த்தை இதேபோல பாசிட்டிவாக சென்றால் நாளை போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் போர் நிறுத்தத்தைதான் உலகநாடுகள் அனைத்தும் விரும்புகின்றன.












Click it and Unblock the Notifications