டிரம்ப் vs கிரீன்லாந்து.. புதின் சொன்ன பதிலை பார்த்தீங்களா! சட்டென டோனை மாற்றிய ரஷ்யா!
மாஸ்கோ: கிரீன்லாந்து தீவை வாங்கியே தீருவேன், விற்பனைக்கு கொடுக்கவில்லை எனில் ராணுவத்தை வைத்து கைப்பற்றுவேன் என்று டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். இப்படி இருக்கையில் இந்த விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புடினின் நிலைப்பாடு, சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
ஏற்கெனவே உக்ரைன் விஷயத்தில், ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ரஷ்யாவை கார்னர் செய்து வருகிறது. எனவே கிரீன்லாந்து விஷயத்தில் புதினின் நிலைப்பாடு என்ன என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

கிரீன்லாந்து விஷயத்தில் என்ன நிலைப்பாடு?
இந்த கேள்விக்கு தற்போது புதின் பதிலளித்துள்ளார். நேற்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக புதின் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் பேசியதாவது, "கிரீன்லாந்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. அந்த பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்.
கட்சி மாறிய புதின்?
டென்மார்க், கிரீன்லாந்தை தனது அடிமை நாடாக கடுமையாக நடத்தியது வேறுபட்ட விஷயம். எனவே அந்த பிரச்சனைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்கள் தங்களுக்குள் இதற்கான தீர்வை எட்டி விடுவார்கள் என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா நிலப்பரப்புகளை வாங்குவது என்பது ஏதோ இன்று புதியதாக நடக்கும் விஷயம் கிடையாது.
எங்களுக்கு என்ன கவலை?
இதற்கு முன்னர், 1917ஆம் ஆண்டில் டென்மார்க், தனது விர்ஜின் தீவுகளை அமெரிக்காவுக்கு விற்றது. அதற்கும் முன்னதாக 1867ஆம் ஆண்டு, நாங்கள் அலாஸ்காவை 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமெரிக்காவுக்கு விற்றோம். எனவே இந்த பிரச்சனைக்கும் எங்களுக்கும் இந்த சம்பந்தமும் கிடையாது" என்று பேசியிருக்கிறார் என்று அந்நாட்டு செய்தி ஊடகமான 'டாஸ் (TASS)' செய்தியை வெளியிட்டிருக்கிறது.
பொடி வைத்து பேசிய புதின்
புதினின் இந்த நிலைப்பாடு, சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. ஏனெனில் அவர், அமெரிக்காவுக்கு எதிராக பேசுவார் என பலரும் நம்பியிருந்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே சமயம் டிரம்பின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் பேசியிருக்கிறார் புதின். இந்த கருத்துக்கு பின்னால் மிகப்பெரிய காரணம் இருக்கிறது. தற்போது உக்ரைன் விஷயத்தில் நேட்டோவால்தான் பிரச்சனை எழுந்திருக்கிறது. மட்டுமல்லாது, மொத்த ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பேசி வந்தன.
ரசிக்கும் புதின்
கிரீன்லாந்து பிரச்சனை வெடித்த பின்னர், அந்த நாடுகள் டிரம்புக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக திரும்பியுள்ளன. இப்படியே ரஷ்யாவுக்கு எதிரான கருத்துக்களை நீர்த்துப்போக செய்யவே புதின் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். சிம்பிளாக சொன்னால், பிரச்சனையை தூர நின்று புதின் ரசித்து வருகிறார்.
ஐரோப்பிய நாடுகள்
அதேபோல கிரீன்லாந்து பிரச்சனை தீவிரமானால், நிச்சயம் நேட்டோவில் பிளவு ஏற்படும். நேட்டோ உடைய வேண்டும் என்பதுதான் புதினின் ஆசை. நேற்று கூட, அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, நேட்டோ அமைப்பு குறுக்கே வரக்கூடாது என்று டிரம்ப் கூறியிருந்தார். இதனால் இந்த அமைப்பில் உள்ள மற்ற ஐரோப்பிய நாடுகள் டென்ஷனாகியுள்ளன. நேட்டோ தனது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது என்பதை புதின் ரசிக்கிறார். எனவேதான் அவரது வாயிலிருந்து இந்த கருத்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications