வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவோம்: கத்தார் மன்னர் வாக்குறுதி
பெர்லின்: வரும் 2022ம் ஆண்டு கத்தாரில் நடக்கும் ஃபீஃபா உலகக் கோப்பையையொட்டி அங்கு உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடும் பிறநாட்டு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் பின் கலிஃபா அல் தானி தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டு ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கத்தாரில் நடக்க உள்ளது. உலகக் கோப்பையையொட்டி கத்தாரில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை திட்டத்தையொட்டி கத்தாரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஜெர்மனி சென்ற கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் பின் கலிஃபா அல் தானி அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர்கள் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது மன்னர் கூறுகையில்,
தவறுகள் நடந்துள்ளது. ஆனால் அதை திருத்திக் கொள்ள பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊழியர்களின் நிலைமையை மேம்படுத்த பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன என்றார்.
உலகக் கோப்பை திட்டத்தில் வேலை செய்ய வந்தவர்கள் உள்ளிட்டவர்கள் ஸ்பான்சரின் அனுமதி இன்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று கத்தார் அரசு கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இதில் பெரும்பாலான ஊழியர்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் 4 லட்சத்து 20 ஆயிரம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் நேபாளத்தைச் சேர்ந்த 400 ஊழியர்கள் கத்தாரில் இறந்துவிட்டதாக நேபாளைச் சேர்ந்த என்ஜிஓ ஒன்று தெரிவித்தது.












Click it and Unblock the Notifications