அணுஆயுதம்.. ஈரானுக்கு செக் வைக்கும் அமெரிக்கா! என்ட்ரியான ரஷ்யா - சீனா! இன்று என்னவாகுதோ? திக்திக்
தெஹ்ரான்: ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்தும் வகையிலான ஒப்பந்தம் மேற்கொள்வது பற்றி இன்று ரோமில் ஈரான் - அமெரிக்கா 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பேச்சுவார்த்தை முடியவில் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அந்த நாடு மீது குண்டு வீசுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை தொடர்பான விவகாரத்தில் ஈரானின் நட்பு நாடாடுகளான ரஷ்யா, சீனா என்ட்ரி கொடுத்துள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே தொடர்ந்து மோதல் உள்ளது. தற்போது டொனால்ட் டிரம்ப் அதிபரான நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் என்பது வலுத்து வருகிறது. இதனால் ஈரான் தனது பாதுகாப்புக்காக அணுஆயுதம் தயாரிக்கும் பணியை தீவிரமாக்கி உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை.

இதனால் ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது. அணுசக்தி திட்டம் என்ற பெயரில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம் உறுதியளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இதுதொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் ஈரானுக்கு கடிதம் எழுதினார்.
இந்த கடிதத்தை தொடர்ந்து முதற்கட்டமாக கடந்த 12ம் தேதி ஈரான் - அமெரிக்கா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தாலும் கூட எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இதையடுத்து இரண்டாம் கட்டமாக இன்று இத்தாலி தலைநகர் ரோமில் அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதன் முடிவில் ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்த தயங்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் அமெரிக்கா - ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் புதிதாக 2 நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. அதன்படி ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை ஈரானுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளன. இப்படியான சூழலில் தான் இன்று நடக்கும் பேச்சுவார்த்தை தொடர்பாக இருநாடுகளும் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளன.
இதுபற்றி சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லியு ஜியான் கூறுகையில், ‛‛ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு சீனா ஆதரவு வழங்குகிறது. ஆனால் அமெரிக்கா தனது நேர்மையை ஈரானிடம் நிரூபிக்க வேண்டும். ஏற்கனவே அமெரிக்கா - ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. அதனை ரத்து செய்துவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்துள்ளது. இதனால் அமெரிக்கா தனது நேர்மையை காட்ட வேண்டும். பரஸ்பர மரியாதையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். படைபலம் உள்பட பிற வழிகளில் ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதை அமெரிக்கா கைவிட வேண்டும். ஈரான் - அமெரிக்கா இடையேயான அணுசக்தி திட்டம் தொடர்பான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தான் தீர்க்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‛‛இருநாடுகள் இடையேயான நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தை ஓமனில் நடந்தது. இது எங்களுக்கு தெரியும். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதனை வரவேற்கிறோம். இப்படியான பேச்சுவாரத்தைகள் என்பது ஈரானின் பதற்றங்களை தணிக்க வழிவகுக்கும்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்கா உடனான 2வது கட்ட பேச்சுவார்ததைக்கு முன்னதாக ஈரான் வெளியறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான பிரதிநிதிகள் ரஷ்யா சென்றனர். ரஷ்யாவும், ஈரானும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இதனால் அமெரிக்கா உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விஷயம், 2ம் கட்ட பேச்சுவார்த்தையை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி இருதரப்பும் விவாதித்தன.
அதுமட்டுமின்றி ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி கொடுத்து அனுப்பிய ரகசிய கடிதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் வழங்கப்பட்டது. அதில் உள்ள விஷயம் என்ன? என்பது ரகசியமாகவே உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்கா ஈரான் உடனான அணுசக்தி திட்டம் தொடர்பான விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேச்சுவார்த்தையில் உன்பாடு ஏற்படாத நிலையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரானை காக்க ரஷ்யா உதவிக்கு செல்லுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ரஷ்யா - ஈரான் இடையே ராணுவ படைபலத்தை ஒருங்கிணைத்து செயல்படுவது, கூட்டு பயிற்சி சார்ந்த ஒப்பந்தங்கள் உள்ளன. இதனால் இன்றைய தினம் நடக்கும் அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications