உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் இப்போதைக்கு ஓயாது? களத்தில் இணையப் போகின்றன அடுத்தடுத்த நாடுகள்?
மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் இப்போதைக்கு ஓயாது.. அடுத்தடுத்து மேலும் பல நாடுகள் இரு பக்கமும் இணையப் போகின்றன என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் தேசிய இனத்தவருக்காக யுத்தம் நடத்துகிறோம் என்கிறது ரஷ்யா. 2 மாகாணங்களை கைப்பற்றியிருக்கும் ரஷ்ய மொழி பேசும் தேசிய இனத்தவருக்கு அதிகாரப் பரவல் வழங்கும் மின்ஸ்க் ஒப்பந்தங்களை உக்ரைன் நடைமுறைப்படுத்தவில்லை என்கிறது ரஷ்யா.

அமெரிக்காவின் ஆத்திரமூட்டல்
இதுதான் யுத்தத்துக்கு வெளிப்படையாக சொல்லப்படுகிற காரணம். ஆனால் அமெரிக்காவின் இடைவிடாத ராணுவ அச்சுறுத்தல்தான் ரஷ்யாவை போருக்குள் தள்ளிவிட்டது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. கிரீஸ் நாட்டில் ஏற்கனவே அமெரிக்காவின் 10,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பால்கன், கருங்கடல் பகுதிகளிலும் அமெரிக்காவும் அதன் நேட்டோ படைகளும் முழு வீச்சில் களமிறங்கின. அமெரிக்கா இதுவரை இல்லாத வகையிலான மிகப் பெரிய அச்சுறுத்தலை தரக் கூடிய கடற்பயிற்சி நடவடிக்கைகளை கருங்கடலில் நடத்தியது. இது ரஷ்யாவை சீண்டிப் பார்த்த நடவடிக்கை என குறிப்பிடுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ரஷ்யாவின் எரிவாயு
மேலும் எண்ணெய் வளமிக்க நாடுகளை ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டு அல்லது கைப்பாவையாக வைத்துக் கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக ரஷ்யா எரிவாயு உற்பத்தியில் படுமுனைப்பு காட்டுகிறது. குறிப்பாக ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சார்ந்து இருக்கும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை அமெரிக்காவில் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

நேட்டோவின் சேட்டைகள்
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அர்த்தமே இல்லாமல் யுத்தத்தில் இறங்கி அடிவாங்கின. ஆனாலும் நேட்டோ அமைப்பு, படைகளை ஒவ்வொரு பிராந்தியமாக விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. குறிப்பாக ரஷ்யாவை சுற்றியிருக்கும் நாடுகளில் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதில் தீவிரம் காட்டியது. இதனால் இப்போது வேறுவழியே இல்லாமல் உக்ரைன் மீது யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது ரஷ்யா.

நாடுகளின் அணிவகுப்புகள்
இப்போது உக்ரைனுக்கு ஆதரவாக போரிட செல்லுங்கள் என சொந்த நாட்டு மக்களுக்கு லுதுவேனியா அனுமதி கொடுத்துள்ளது. பெலாரஸ் நாடோ ரஷ்யா ஆதரவு நிலையில் இருக்கிறது. சீனாவும் ரஷ்யாவை ஆதரிக்கிறது. இந்தியா, மனிதாபிமான நடவடிக்கைகள் என்ற பெயரில் சற்றே ஒதுங்கி நிற்கிறது. பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் ரஷ்யா- உக்ரைன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இந்த யுத்தம் தொடருமானால் ரஷ்யா பக்கமும் உக்ரைன் பக்கமும் அடுத்தடுத்து நாடுகள் கைகோர்ப்பது தவிர்க்க முடியாத உலக யுத்தமாகிவிடும் என அஞ்சப்படுகிறது.
Recommended Video

அமெரிக்காவின் சதி?
அதேநேரத்தில் இன்னொன்றும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. ரஷ்யாவை போருக்குள் இழுத்துவிட்டு அதன் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கிவிடும் நோக்கத்துடனேயே அமெரிக்காவின் ஒவ்வொரு நகர்வும் இருந்து வருகிறது. இப்போதும் கூட நட்புக்கரம் நீட்டுகிற உக்ரைனை அழியவிட்டு அமெரிக்கா வேடிக்கைதான் பார்க்கிறது.. அமெரிக்காவைப் பொறுத்தவரை தனது மேலாதிக்க நலன் மட்டுமே குறிக்கோள். அமெரிக்கா விரித்த வலையில் ரஷ்யா சிக்கிக் கொண்டுவிட்டது என்பதும் சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications