ரஷ்யாவின் உக்கிரம்- உக்ரைன் நகரங்களில் எண்ணெய் கிடங்குகள், எரிவாயு குழாய்கள் தகர்ப்பு!
மாஸ்கோ: உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் உள்ள எண்ணெய் கிடங்குகள், எரிவாயு குழாய்களை ரஷ்ய படைகள் தகர்த்ததால் பல இடங்களில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது என்கின்றன அங்கிருந்து வரும் தகவல்கள்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அணியில் உக்ரைன் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை. அதேபோல் உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது ரஷ்யாவின் கருத்து.

ரஷ்யா படையெடுப்பு
இதனையடுத்து ரஷ்ய மொழி பேசும் பிரிவினைவாத குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படையை அனுப்பும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு கை கொடுக்கவில்லை.

லட்சக்கணக்கானோர் அகதிகள்
இதனால் யுத்தப் பேரழிவில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது உக்ரைன். அந்நாட்டை விட்டு லட்சக்கணக்கான பெண்கள், குழந்தைகள் அகதிகளாக போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதேநேரத்தில் உக்ரைன் ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ரஷ்யாவுடன் யுத்தம் நடத்தியாக வேண்டும் என உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.

எரிவாயு குழாய்கள் தகர்ப்பு
இந்நிலையில் உக்ரைனின் எரிவாயு,எண்ணெய் கிடங்கு ஆகியவற்றின் உள்கட்டமைப்புகளை நிர்மூலமாக்குவதில் ரஷ்யா முனைப்பு காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்கீயவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் எரிவாயு குழாய்கள் தகர்க்கப்பட்டு தீ கொழுந்து விட்டு எரிவதாக சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கீயவ் நகரின் வாசில்கீவ் பகுதியிலும் இதேபோல் தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி மேயர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியர், தமிழர் பரிதவிப்பு
இதனிடையே உக்ரைனில் சிக்கியிருக்கும் தங்களது நாட்டவரை மீட்பதில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் முழு வீச்சில் இறங்கி உள்ளன. உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மருத்துவ மாணவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளார். இன்னமும் தமிழக மாணவர்கள் முழுமையாக மீட்கப்படாததால் அவர்களது பெற்றோர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications