பிரதமர் மோடியை புதின் ஒருபோதும் மதித்ததே இல்லை.. இந்த சம்பவமே சாட்சி! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபர!
கீவ்: பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் புதின் ஒருபோதும் மதித்ததே இல்லை, அதனால் தான், பிரதமர் மோடி, புதினை சந்திக்க மாஸ்கோ சென்றிருந்தபோது உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது என பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டி அளித்துள்ளார்.
அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி போலந்து நாட்டைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிரதமர் மோடியை உக்ரைன் நாட்டு அதிபர் வெலோடிமிர் ஜெலன்ஸ்கி கை கொடுத்து, ஆரத்தழுவி வரவேற்றார். கீவ் நகரில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் போர் சூழல் குறித்த புகைப்பட காட்சிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்தியாவுக்கும், உக்ரைனுக்கும் தூதரக உறவுகள் ஏற்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு உக்ரைனுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். இதன் மூலம் உக்ரைன் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியா இரு நாடுகளிடையிலுமே நட்புறவை மேம்படுத்தி வருகிறது.
கடந்த 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போரில் உக்ரைனின் 25 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்டது. போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி எடுத்தும், இதுவரை சுமுக தீர்வை எட்ட முடியவில்லை.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி, உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், பிரதமர் மோடியும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது, உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஜெலன்ஸ்கி உடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய பிரதமர் மோடி, உக்ரைனில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகிறேன். போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதில் மற்ற நாடுகளைவிட இந்தியா 2 அடி முன்னால் இருக்கிறது. போரில் உயிரிழந்த குழந்தைகளை நினைக்கும்போது மனம் துடிக்கிறது. ஒரு நாகரிகமான சமுதாயத்தில் குழந்தைகள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது.
எந்த ஒரு போரிலும் இந்தியா நடுநிலையை கடைபிடிப்பது கிடையாது. இந்தியா எப்போதுமே அமைதியின் பக்கம் நிற்கிறது. நாங்கள் புத்தர், காந்தியடிகள் பிறந்த மண்ணை சேர்ந்தவர்கள். அவர்கள் காட்டிய வழியில் உலகத்துக்கு அமைதியை போதித்து வருகிறோம். உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே 140 கோடி இந்தியர்களின் விருப்பம். ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசியபோது, “இது போருக்கான காலம் கிடையாது” என்று நேரடியாக கூறினேன். இப்போதும் அதே கருத்தை முன்வைக்கிறேன் என்றார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், "கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி மாஸ்கோவிற்கு சென்ற அதே நாளில் உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் மூலம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவையோ பிரதமர் மோடியையோ மதிக்கவில்லை என்பதை காட்டியது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ரஷ்யாவின் இராணுவ முயற்சிகளுக்கு ஆதரவாக பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நேர்மையாக விவாதித்தோம். உக்ரைனின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை இந்தியா ஆதரிக்கிறது. இந்த ஆதரவு முக்கியமானது, ஏனெனில் இது ஐ.நா. சாசனத்தை மதிக்கும் உலகளாவிய கோட்பாட்டுடன் ஒத்துப்போகிறது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த மாதம் ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் விளாமிடிர் புதினை சந்தித்துப் பேசினார். புதினை கட்டியணைத்து பிரதமர் மோடி பேசியதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அப்போது விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications