ஷேக் ஹசீனா கட்சி வங்கதேச தேர்தலில் போட்டியிட முடியுமா? தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்
டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. விரைவில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட வாய்ப்பு உள்ளதா? இல்லையா? என்பது பற்றி அந்த நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பான கருத்தை கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. இந்த வன்முறையை தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது.

அதாவது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஷ் தலைமையில் வங்கதேச இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. இந்த இடைக்கால அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றது. இந்த இடைக்கால அரசின் கட்டுப்பாட்டில் தான் தற்போது வங்கதேசம் உள்ளது.
இதற்கிடையே தான் வங்கதேசத்தில் விரைவில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முறைகேடு இன்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேச தலைமை தேர்தல் ஆணையர் எஎம்எம் நசீர் உதின் கூறியதாவது:
வங்கதேசத்தில் வெளிப்படையான மற்றும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் அடுத்த 6 மாதங்களுக்கு அப்டேட் செய்யப்படும். இந்த முறை தேர்தலில் பழைய நடைமுறை பின்பற்றப்படுவது இல்லை. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தேர்தல் விஷயத்தில் நாடு குறிப்பிடும்படியான ஒருமித்த கருத்தை வளர்ப்பதில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை அரசு அல்லது நீதித்துறை தடை செய்யாத பட்சத்தில் அந்த கட்சி போட்டியிடலாம்'' என்றார். அதாவது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த கட்சியினர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வங்கதேசத்தில் அதிகரித்துள்ளது.
இதனால் தான் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற கேள்விக்கு வங்கதேச தேர்தல் ஆணையர் எம்எம்எம் நசீர் உதின் இந்த பதிலை அளித்துள்ளார். இதன்மூலம் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டால் யாரும் போட்டியிட முடியாது. மாறாக தடை விதிக்கப்படாவிட்டால் அந்த கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட முடியும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
முன்னதாக வங்கதேச தேர்தல் தொடர்பாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் கருத்து தெரிவித்து இருந்தார். அப்போது அவர், ‛‛வங்கதேசத்தில் நாடாளமன்ற தேர்தலை 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தி முடிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். அதோடு ஓட்டளிக்கும் வயதை 17 ஆக குறைக்க வேண்டுமு் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications