தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர தீ விபத்து.. ஊழல் ஆவணங்களை அழிக்க சதி? பரபர தகவல்
கேப் டவுன்: தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் மிகப் பெரியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
உலகின் பழமையான நாடாளுமன்ற கட்டிடங்களில் ஒன்று தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றம். சுமார் 138 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மோசமான தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது குறித்து சில முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளது.

திடீர் தீ விபத்து
தென் ஆப்பிரிக்காவின் இந்த 138 ஆண்டுகள் பழமையான பாராளுமன்ற வளாகத்தில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதில் நாடாளுமன்ற கட்டிடத்தின் ஒரு பகுதியின் கூரைகளும் அப்படியே பெயர்ந்து விழுந்தது. இந்த தீ படு வேகமாக பரவியதால் கேப் டவுனுக்கு மேலும் கரும் புகை மண்டலம் உருவானது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தை அணைக்க சுமார் 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

யாருக்கும் காயம் இல்லை
நல்வாய்ப்பாக இந்தத் தீ விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை; யாருக்கும் தீக்காயமும் ஏற்படவில்லை. புத்தாண்டு விடுமுறைக்காக நாடாளுமன்றம் மூட்டப்பட்டிருந்ததால் அங்கு யாரும் இல்லை. இதனால் மாபெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இது ஜனநாயகத்திற்கு மிகவும் சோகமான நாள் என்று குறிப்பிட்ட அதிபர் ரமபோசா, இந்த விபத்தால் நாடாளுமன்ற கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை ஆய்வு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஒருவர் கைது
இந்தத் தீவிபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து போலீசார் குற்ற வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தத் தீவிபத்தில் பல முக்கிய மற்றும் அரிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இந்தத் தீவிபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதான அந்த நபர் தீ விபத்து ஏற்பட்ட போது நாடாளுமன்ற கட்டிடத்திற்கு உள்ளே இருந்ததால் அவரிடம் தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன காரணம்
நாடாளுமன்ற கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்ட போது உள்ளே இருந்த தண்ணீர் தெளிக்கும் கருவிகள் சரியாக வேலை செய்யவில்லை. அலாரமும் தாமதமாகவே அடித்துள்ளது. இந்த தாமதம் தான் தீ மளமளவெனப் பரவ முக்கிய காரணமாக இருந்துள்ளது. அதேநேரம் தென் ஆப்பிரிக்க அரசின் மீதான ஊழல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இது திட்டமிட்ட சதிச் செயலாக இருக்கலாம் என்றும் அந்நாட்டின் எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஊழல் புகார்
இது குறித்து எம்பி வில்லி மதிஷா கூறுகையில், "நாடாளுமன்றத்தில் இருந்த பல முக்கிய ஆவணங்கள் இதில் அழிந்துள்ளன. இந்த (சிரில் ரமபோசா) அரசு ஊழல் மலிந்துவிட்ட அரசு. இந்த ஊழலை நாங்கள் நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்த இருந்தோம். இது குறித்து நாடாளுமன்றத்திலேயே கேள்வி எழுப்ப இருந்தோம். ஆனால், இது தொடர்பான ஆவணங்கள் எல்லாம் இப்போது தீயில் அழிந்துவிட்டன. இது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்து என்பதில் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது" என்றார்.

முதல்முறை இல்லை
சமீப காலத்தில் தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் தீ விபத்து ஏற்படுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தின் இதே பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், அப்போது தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இப்படி அடுத்தடுத்து தீ விபத்து ஏற்படுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்பும் வகையிலேயே உள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்..












Click it and Unblock the Notifications