கொரோனா தடுப்பூசி போட்டால் மாஸ்க் தேவையில்லை.. வேக்சின் பணிகளில் தீவிரம் காட்டும் தென் கொரியா
சியோல்: கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை எடுத்துக் கொள்பவர்களும் இனி பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியத் தேவையில்லை என்று தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.
உலகில் இன்னும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதேநேரம் கொரோனா பாதிப்பும் பரவலும் கையை மீறிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நாடுகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தடுப்பூசிகளே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதி விரைவாக மேற்கொண்டு வருகின்றன.

தென் கொரியா
குறிப்பாகக் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென் கொரியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தொடக்கம் முதலே சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அங்குக் கடந்த 2015ஆம் ஆண்டு தான் MERS என்ற தொற்று பரவல் ஏற்பட்டது. அதைக் கட்டுப்படுத்திய அனுபவத்தைக் கொண்டு, தென் கொரியா கொரோனா பாதிப்பை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது. முறையான சோதனை, சரியான தனிமைப்படுத்துதல் மூலம் கொரோனா பாதிப்பைத் தென் கொரியா கட்டுப்படுத்தியது.

தடுப்பூசி பணிகள்
இந்நிலையில், அடுத்தகட்டமாகத் தென் கொரியா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. சுமார் 5.17 கோடி மக்கள்தொகையைக் கொண்ட தென் கொரியா, தற்போது வரை 7.7% பேருக்குத் தடுப்பூசி செலுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70% பேருக்குத் தடுப்பூசிகளைச் செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் அந்நாட்டு அரசு, தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்குப் பல தளர்வுகளை அறிவித்துள்ளது.

மாஸ்க் வேண்டாம்
அதன்படி வரும் ஜூன் முதல் ஒரு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூட அனுமதிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் கிம் பூ-க்யூம் அறிவித்தார். அதேபோல அவர்கள் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் அக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தும் விதிமுறைகள் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும் எனப் பிரதமர் கிம் பூ-க்யூம் குறிப்பிட்டார்.

60-74 வயதுடையவர்கள்
தென் கொரியாவில் 60-74 வயதுடையவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசிகள் பணிகள் தொடங்குகிறது. நாட்டில் தற்போது 60-74 வயதுடைய 60% பேர் தடுப்பூசி செலுத்தப் பதிவு செய்துள்ளதாகவும் பிரதமர் கிம் பூ-க்யூம் தெரிவித்தார். அங்கு நேற்று மட்டும் புதிதாக 707 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. தென் கொரியாவில் இதுவரை 1.37 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1940 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications