சுனாமி போல ஸ்பெயினை அடித்து காலி செய்த வெள்ளம்.. 200+ உயிரிழப்பு, பலர் மாயம்.. என்ன தான் நடந்தது!
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் சமீபத்தில் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பல ஆயிரம் பேர் மாயமடைந்துள்ளனர். சுனாமி போல ஸ்பெயினை அடித்து காலி செய்த இந்த வெள்ளம் அங்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் உள்ள மிக முக்கிய நாடுகளில் ஒன்று ஸ்பெயின். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு மிகப் பெரியளவில் ஒரு மழை வெள்ளம் ஏற்பட்டது.

ஸ்பெயின் வெள்ளம்: கிழக்கு ஸ்பெயின் பகுதியில் சில நிமிடங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், அங்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டதால் மக்களால் தப்பிக்கக் கூட முடியவில்லை. வாகனங்கள், வீடுகள் மற்றும் கடைகள் என எல்லாமே வெள்ளத்தில் சிக்கியது. அங்கு இதுவரை 213 உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அங்குள்ள கிழக்கு வலென்சியா பிராந்தியத்தில் தான் பாதிப்பு மிக மோசமாக இருந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அங்கு வீடுகள், தெருக்கள் மற்றும் சாலைகளை மண் மற்றும் குப்பை மூடியுள்ள நிலையில், தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் இறங்கியுள்ளனர். பல பகுதிகளில் இன்னுமே மின்சாரம் மற்றும் தண்ணீர் சேவை சீராகவில்லை. மேலும் அத்தியாவசிய பொருட்களும் தட்டுப்பாடு நிலவுகிறது.

என்ன நடந்தது: அங்கு மாக்ரோ மற்றும் துரியா நதிப் படுகைகளில் மழை கொட்டி தீர்த்த நிலையில், போயோ ஆற்றங்கரையில் நீர் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அங்குக் கரையை ஓட்டியுள்ள பகுதிகளில் மிகப் பெரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் அங்குப் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டது.
கடந்த 20 மாதங்களில் பெய்த மழையை விட அந்த குறிப்பிட்ட எட்டு மணி நேரத்தில் அதிக மழை பெய்ததாக ஸ்பெயின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தளவுக்கு மழை என்றால் பாதிப்பு எந்தளவுக்கு இருக்கும் என யோசித்து பாருங்கள்.

சுனாமி போல: இது குறித்து அப்பகுதி மக்கல் கூறுகையில், "அந்த நாளை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது. வானமே பிளந்தது போ மழை கொட்டியது. இதுவரை அப்படியொரு மழையைப் பார்த்தே இல்லை. மலையில் இருந்து அப்படியே சுனாமி சரிந்தது போல இருந்தது. அடுத்து சில நிமிடங்களில் மின்சாரம் போய்விட்டது. எங்களை மழை நீர் சூழ்ந்துவிட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.
என்ன காரணம்: இதற்கு இரண்டு காரணங்களை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். முதலில் நமது செயல்களால் பூமியின் வெப்பம் அதிகரிக்கும் நிலையில், இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம். வெப்பமான காற்று அதிக மழைக்குக் காரணமாக இருக்கிறது. இதுவே முதல் காரணம். அடுத்து ஜெட் ஸ்ட்ரீமில் ஏற்பட்ட மாற்றம். இந்த இரண்டு காரணங்களால் அங்குக் கனமழை கொட்டி இருக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கடந்த காலம்: மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டில் அவ்வப்போது புயல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், இதுபோன்ற பிளாஷ் வெள்ளம் என்பது அசாதாரணமானது. அதேநேரம் கடந்த காலங்களில் மூன்று முறை இதுபோன்ற மோசமான வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறதாம். 1957இல் ஏற்பட்ட வெள்ளத்தால் துரியா நதி தனது திசையையே மாற்றிக் கொண்டது. அதேபோல 1982ம் ஆண்டு ஒரு முறையும் 1987ம் ஆண்டு மற்றொரு முறையும் இதுபோன்ற மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications