அதெப்படி ராஜபக்சே கோஷ்டிகளுக்கு நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கலாம்?கனடா தூதரை அழைத்து சீறிய இலங்கை!
கொழும்பு: இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்டோர் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு கனடா அதிரடி தடை விதித்துள்ளது. இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான கனடா தூதரை நேரில் அழைத்து தமது கண்டனத்தை தெரிவித்தது இலங்கை.
இலங்கையின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சே, பாதுகாப்பு செயலாளராக கோத்தபாய ராஜபக்சே பதவி வகித்தனர். அக்காலகட்டத்தில் 2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தம் நடைபெற்றது. அதில் சர்வதேச போர் விதிகளை மீறி ரசாயன குண்டுகள் வீசப்பட்டன. சர்வதேச விதிகளை மீறி ஈழத் தமிழர்கள் ஈவிரக்கமே இல்லாமல் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கையில் ராஜபக்சேக்களின் அதிகார காலத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலைக்கு நீதி கோரி இன்னமும் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களின் விளைவாக மகிந்த ராஜபக்சே, கோத்தாபய ராஜபக்சே, ராணுவ அதிகாரிகள் சுனில் ரத்நாயக்க, ஹெட்டியராச்சி ஆகியோர் கனடாவுக்குள் நுழைவதற்கு அந்நாடு அதிரடியாக தடை விதித்தது. மேலும் தடை விதிக்கப்பட்ட 4 பேருடன் கனடா நாட்டவர்கள் எந்த ஒரு நிதி உறவும் வைத்துக் கொள்ள கூடாது என்பதும் அந்நாட்டின் உத்தரவு.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கோரும் வகையில் வெளிநாடு ஒன்று மேற்கொண்ட இந்த தடையை உலகத் தமிழர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் இலங்கை அரசு இந்த தடைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான கனடாவின் தூதரை நேரில் அழைத்து இலங்கை அரசு தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியது. மேலும் கனடா அரசாங்கம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இலங்கை வலியுறுத்தியது.












Click it and Unblock the Notifications