வெடிக்கும் பெரிய போர்? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு பறந்த உத்தரவு..வார்னிங்.
இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் என்பது கடுமையாக வலுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானில் நுழைந்து நம் படை வீரர்கள் தாக்குதல் நடத்தலாம். இந்நிலையில் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உள்ள 13 தொகுதிகளில் வசிக்கும் மக்கள் 2 மாதத்துக்கான உணவு பொருட்களை சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரிய போர் வெடிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகினர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்க நம் படைகள் தயாராகி வருகிறது. விரைவில் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை நம் படை வீரர்கள் கொடுக்க உள்ளனர். எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அரபிக்கடலில் போர் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் விமானப்படை விமானங்களும் அவசர கால பயிற்சியை தொடங்கி உள்ளன. அதேபோல் பாகிஸ்தானும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
அதுமட்டுமின்றி எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதற்கு நம் படை வீரர்கள் உரிய முறையில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் எல்லையில் நாளுக்கு நாள் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியா பதிலடி கொடுக்கும்போது பாகிஸ்தானும் தாக்கலாம். இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் எல்லை கட்டுக்காட்டு கோட்டு பகுதியில் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமர் சவுத்ரி அன்வர் உல் ஹக் மக்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அங்குள்ள நாடாளுமன்ற சபையில் அவர் பேசியதாவது:
‛‛எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உள்ள 13 தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 2 மாதத்துக்கான உணவு பொருட்களை சேமித்து வைத்து கொள்ள கூறியுள்ளோம். தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு ரூ.35 லட்சம் அமெரிக்கா டாலர் நிதி என்பது ஒதுக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கான உணவு, மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளது'' என்றார்.
அதேபோல் நீலம் பள்ளத்தாக்கு மற்றும் எல்லையை ஒட்டியுள்ள மற்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுதும் உள்ள மதரசாக்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 1000 மதரசாக்கள் மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அவசர உதவிக்கான கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. ஏனென்றால் இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடரும் நீண்ட கால பிரச்சனை என்பது காஷ்மீரை மையப்படுத்தி தான் நடந்து வருகிறது. நமக்கு சொந்தமான காஷ்மீரின் ஒருபகுதியை தான் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் நம்மிடம் உள்ள காஷ்மீருக்கும் பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதான் இருநாடுகள் இடையே பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.
மேலும் தற்போது பாகிஸ்தான் வசம் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இருநாடுகள் இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உள்ளது. இது பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் ஏராளமான பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி மையம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தம் 40 முகாம்கள் வரை இங்கு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிருந்து தான் பயங்கரவாதிகள் நம் நாட்டுக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் தற்போது நம் படை வீரர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை குறிவைத்து தாக்கலாம். மேலும் இதற்கு முந்தைய தாக்குதல்களை விட இந்த முறை நம் படை வீரர்கள் உக்கிரமாக தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் உள்ளது. இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்போரின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கலாம். இதனால் தான் பயந்துபோன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமர் சவுத்ரி அன்வர் உல் ஹக் மேற்கூறிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications