எலும்பும் தோலுமாய் சூடான் பிஞ்சுகள்.. இலை தழைகளை உண்ணும் அவலம்.. பார்த்தாலே ரத்தம் கொதிக்குதே!
கார்தூம் (சூடான்): சூடானில் தொடரும் உள்நாட்டுப் போர், இன்று உலகையே அதிரவைக்கும் மனிதாபிமான பேரழிவாக மாறியுள்ளது.. ஒரு வேளை உணவுக்கே போராடும் லட்சக்கணக்கான மக்கள், பசி மற்றும் பட்டினி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.. UN OCHA, WFP மற்றும் IPC தரவுகள் வெளிப்படுத்தும் அதிர்ச்சி தகவல்கள், சூடானின் நிலையை "ஃபேமைன் எச்சரிக்கை" கட்டத்திற்கு தள்ளியுள்ளன..
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய உள்நாட்டுப் போர், தற்போது 2 ஆண்டுகளைக் கடந்து மூன்றாவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

ராணுவத்திற்கும், துணை ராணுவமான விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையிலான இந்த அதிகார மோதல், அந்நாட்டை நவீன வரலாற்றில் காணாத மிக மோசமான உணவுப் பஞ்சத்திற்குள் தள்ளியுள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (UN OCHA) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவை வெளியிட்டுள்ள தரவுகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சூடான் - போர் - தொடரும் பட்டினி சாவுகள்
IPC எனப்படும் சர்வதேச அளவில் உணவுப் பாதுகாப்பைத் தரப்படுத்தும் அமைப்பின்படி, சூடானின் பல பகுதிகள் தற்போது நிலை 4 , நிலை 5 ஆகிய மிக ஆபத்தான கட்டங்களை எட்டியுள்ளன.
குறிப்பாக வடக்கு டார்பூர் பகுதியில் உள்ள சாம்சாம் அகதிகள் முகாம் போன்ற இடங்களில் அதிகாரப்பூர்வமாகவே பஞ்சம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் பட்டினிச் சாவு என்ற விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைய நிலையில் சுமார் 2.6 கோடி மக்கள் கடுமையான பசியால் வாடுகிறார்கள்.. இதில் 7.5 லட்சம் மக்கள் நேரடியாக பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறார்களாம்.
சிகிச்சை அளிக்க வழியில்லை
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். நாட்டில் உள்ள 100-ல் 80 மருத்துவமனைகள் செயல்படவில்லை. இதனால் அடிபட்டவர்களுக்கும், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் சிகிச்சை அளிக்க வழியில்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.
கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே இதுதான் மிகப்பெரிய இடப்பெயர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. இவர்களில் பலர் உயிருக்கு பயந்து பக்கத்து நாடுகளான சாட் மற்றும் எகிப்திற்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
சூடானில் நடக்கும் சண்டையினால் அங்கிருக்கும் விவசாய நிலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. கடைகளுக்கு பொருட்கள் வரும் பாதைகளும் துண்டிக்கப்பட்டதால், மக்களுக்கு உணவு கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை, போர் நடக்கும் இடங்களுக்குக் கொண்டு செல்ல விடாமல் சில படைகள் தடுத்து நிறுத்துகின்றனவாம்..
எலும்பும் தோலுமாய் குழந்தைகள்
உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதால், உதவி செய்ய நினைக்கும் தன்னார்வலர்களும் அந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த போரினால் பெண்களும் குழந்தைகளும் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான குழந்தைகள் சரியான உணவு இல்லாமல் எலும்பும் தோலுமாக மாறி வருகின்றனர். உலக நாடுகள் உடனடியாகப் பண உதவி செய்து, இந்தப் பிரச்சனையில் தலையிடாவிட்டால், சூடான் நாடு முழுவதும் பிணக்குவியலாக மாறும் அபாயம் உள்ளது என்று தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. ஒரு வேளை சாப்பாட்டுக்காக மக்கள் ஏங்கும் நிலை இருப்பது மனித நேயத்திற்கே விடப்பட்ட பெரிய சவாலாகும்.


Click it and Unblock the Notifications
