நம்புங்கய்யா.. ஓடி ஒளியாதீங்க.. பொருளாதார நிபுணர்களிடம் கெஞ்சும் தாலிபான் தலைகள்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்வேறு நிதித்துறை அரசு ஊழியர்கள், பொருளாதார நிபுணர்களை பணிக்கு திரும்பும்படி தாலிபான்கள் கெஞ்சி வருகிறார்கள். இவர்கள் இன்றி நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் எல்லோரையும் உடனே பணிக்கு திரும்பும்படி தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருபவர் அஷ்ரப் ஹைதாரி. அங்கு தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததும் அரசு அலுவலர்கள் பலரிடையே அச்சம் நிலவியது. முந்தைய அரசில் வேலை பார்த்த காரணத்தால் எங்கே தங்களுக்கு சிக்கல் ஏற்படுமோ, தங்களுக்கு பிரச்சனை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வந்தது. இதனால் அரசு ஊழியர்கள் பலர் தலைமறைவானார்கள், பலர் தங்கள் வீட்டிலேயே முடங்கினார்கள்.
அஷ்ரப் ஹைதாரியும் தாலிபான்களுக்கு பயந்து தனது வீட்டிலேயே முடங்கிவிட்டார். அங்கு தாலிபான்கள் வென்ற நாளில் இருந்து இவர் நிதித்துறை அலுவலகம் பக்கமே செல்லவில்லை.

போன்
இந்த நிலையில்தான் அஷ்ரப் ஹைதாரிக்கு அந்த போன் கால் வந்து இருக்கிறது. பயந்து கொண்டே அஷ்ரப் ஹைதாரி போனை எடுத்துள்ளார், மறுமுனையில் தாலிபான் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் பேசி உள்ளார். நாங்கள் தாலிபான் படையில் இருந்து பேசுகிறோம் என்று மறுமுனையில் பேசியவர் கூறியுள்ளார். பயத்தின் உச்சிக்கே சென்றவர்.. எங்கே தாலிபான்கள் தன்னை தண்டிப்பார்களோ என்று கலங்கி போனார். ஆனால் மறுமுனையில் பேசிய தாலிபான் அமைப்பை சேர்ந்தவர்.. நீங்கள் உடனே பணிக்கு திரும்புங்கள். உங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை.

அழைப்பு
நீங்கள் எப்போதும் போல பணிகளை மேற்கொள்ளலாம். உங்களை போன்ற மூத்த அதிகாரிகள் எங்களுக்கு அவசியம். நீங்கள் எல்லாம் இருந்தால் நாட்டின் பொருளாதாரம், பணிகள் தொடர்ந்து இயங்கும் என்றும் கூறியுள்ளனர். இதை கேட்ட அஷ்ரப் ஹைதாரி சிலிர்த்து போனார். தனக்கு நடந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்களில் இவர் பேட்டியும் அளித்துள்ளார். ஆம் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பொருளாதார வல்லுநர்கள், நிதித்துறை அதிகாரிகளை தாலிபான்கள் மீண்டும் பணிக்கு அழைத்து வருகிறார்கள்.

பணி செய்ய ஆள் இல்லை
முன்னாள் அரசு ராஜினாமா செய்த நிலையில் தாலிபான்கள் இன்னும் முழுதாக ஆட்சி அமைக்கவில்லை. சில தற்காலிக அமைச்சர்கள் மட்டுமே பதவி ஏற்று உள்ளனர். இதனால் நாட்டின் பல்வேறு பணிகள் முடங்கி உள்ளன. முக்கியமான நிதித்துறை பணிகள் முடங்கி உள்ளது. இதன் காரணமாகவே நிதித்துறையில் பணியாற்றிய நபர்கள், வல்லுனர்களை தாலிபான்கள் மீண்டும் அழைக்க தொடங்கி உள்ளனர். தாலிபான்களிடம் அதிக அளவில் நிதித்துறை வல்லுனர்கள் இல்லாத நிலையில் இந்த அழைப்பு சென்றுள்ளது.

அஷ்ரப் ஹைதாரி
அஷ்ரப் ஹைதாரி மட்டுமின்றி பலருக்கு இப்படி அழைப்பு சென்றுள்ளது. காபூலில் இருந்து மற்ற மாகாணங்களுக்கு நிதி அனுப்ப வேண்டும், தினசரி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால் இப்படி பலருக்கு அழைப்பு சென்றுள்ளது. முதல் கட்டமாக நிதித்துறை பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் மற்ற துறைகளில் இருக்கும் பணியாளர்கள் அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. உள்ளே ஆயுதம் இன்றி தாலிபான்கள் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிராகிறாள்.

வரவில்லை
ஆனால் அதே சமயம் பல நிர்வாகிகள் தாலிபான்கள் அழைத்தும் அச்சம் காரணமாக பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இன்னும் சிலரோ தாலிபான்களுக்கு அஞ்சி வெளிநாடு தப்பி ஓடிவிட்டதால் அவர்களின் இடம் காலியாக உள்ளதாம். நீங்கள் எல்லோரும் பணிக்கு திரும்பினால்தான் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று தாலிபான்கள் நிதித்துறை ஊழியர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாம். இன்னொரு பக்கம் நிதித்துறையில் வேலை பார்க்கும் பல பெண்கள் வேலைக்கு வரவில்லை.

தலைகீழ்
இப்படி வேலைக்கு வராத பெண்களுக்கு அழைப்பு எதுவும் செல்லவில்லை என்றும் சோஹ்ராப் சிக்கந்தர் என்ற நிதித்துறை நிர்வாகி தெரிவித்து இருக்கிறார். அங்கு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் பெண்களுக்கு பணி செய்யும் உரிமை அளிக்கப்படும், பெண்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்று தாலிபான்கள் தெரிவித்தது.
ஆனால் பல மாகாணங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதை தாலிபான்கள் தடுப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. சில அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்றும் செய்திகள் வருகின்றன.












Click it and Unblock the Notifications