இறுக்கமான ஆடை அணிந்து வந்த பெண்ணை கொலை செய்த தாலிபான்கள்?
பலுசிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இறுக்கமான உடையை அணிந்து கொண்டு எந்த ஆண் உறவினரின் துணையின்றி வெளியே வந்ததால் அந்த பெண் தாலிபான்களால் கொலை செய்யப்பட்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து மிக முக்கிய மாகாணங்களை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் இவர்களின் கை ஓங்கியுள்ளது.
தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானில் வசிக்கும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று பணியாற்றவும் இந்த அமைப்பு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தின் தலைநகரின் சில பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அது போல் கடந்த இரு தினங்களில் இரு மாகாண தலைநகரங்களை தாலிபான்கள் கைப்பற்றியதால் அவர்களிடம் இருந்த மீட்க ஆப்கான் ராணுவம், தாலிபான்கள் தங்கியிருந்த கட்டடங்கள் , பதுங்கு குழிகள் மீது ராணுவம் குண்டு மழை பொழிந்தது. இந்த தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
எனினும் தாலிபான்களின் அட்டகாசம் மேலும் மேலும் அதிகரித்து வருவதை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் கட்டுப்பாட்டில் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கு பால்க் மாகாணத்தின் சமர்குவாந்த் கிராமம். இந்த கிராமம் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பெண் நசானின்.
இவர் வீட்டை விட்டு வெளியே சென்ற போது தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீஸார் கூறுகையில் நசானின் மசார் இ ஷெரீப் என்ற இடத்திற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பி ஒரு வாகனத்தில் ஏற முயன்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அவர் இறுக்கமான ஆடை அணிந்து சென்றதாலும் ஒரு ஆண் உறவினர் அதாவது தந்தை, சகோதரர், கணவர், தாத்தா ஆகிய உறவுகளுடன் வெளியே செல்லாததாலும் அந்த பெண் தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் முகம் மற்றும் உடலை மறைக்கும் வகையில் பர்தா உடையை அணிந்திருந்ததாகவும் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications