ஆப்கானில் தாலிபான் ஆட்டம்.. நட்பு நாடுகளை கைவிட்ட அமெரிக்கா.. கஷ்டப்பட்டு மீட்ட இந்தியா.. பின்னணி!
காபுல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை அதிபர் பிடன் அவசர அவசரமாக வெளியேற்றி வருகிறார். அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு இது பெரிய அதிர்ச்சியை, ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
Recommended Video
"ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது.. இனி தாலிபான் அங்கு வென்று விடுமா?" என்று அமெரிக்க அதிபர் பிடனை பார்த்து செய்தியாளர் ஒருவர் வெள்ளை மாளிகையில் இரண்டு நாட்களுக்கு முன் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த பிடன், தாலிபான் வென்றுவிடும் என்று நான் கூற மாட்டேன்.
நாங்கள் ஆப்கான் படைகளுக்கு பயிற்சி அளித்து இருக்கிறோம். ஆப்கான் ராணுவம் மிகவும் வலிமையான ராணுவங்களில் ஒன்று என்று குறிப்பிட்டார்.

என்ன சொன்னார்
அதோடு, நாங்கள் பல ஆயிரம் ஆயுதங்களை ஆப்கான் படைகளுக்கு கொடுத்துள்ளோம். அவர்கள் உலகில் உள்ள மற்ற ராணுவம் போல முறையான பயிற்சி பெற்றவர்கள். அதனால் அவர்கள் தாலிபான் படைகளிடம் வீழ்ச்சி அடைய மாட்டார்கள், என்று பிடன் தனது பேட்டியில் குறிப்பிட்டார். வெளியில் இருந்து பார்க்க பிடனின் இந்த பேட்டி சிறப்பானது போல தோன்றினால்.. உண்மையில் இது ஒரு ஆபத்தான செய்தி.

ஆபத்து
ஆப்கான் படைகளுக்கு நாங்கள் பயிற்சி கொடுத்துவிட்டோம், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பிடன் கூறுவதே.. இனி ஆப்கானிஸ்தான் விஷயத்தில் அமெரிக்க சுத்தமாக தலையிடாது என்பதை குறிக்க கூடியதுதான். ஆப்கானில் தாலிபான் படைகள் வென்றாலும் கூட அமெரிக்க அதில் இனி தலையிடாது என்பதை உணர்த்தும் பேட்டியாகும் இது. ஆளை விடுங்கள் என்று கூறுவது போல அமெரிக்கா மொத்தமாக ஆப்கானில் இருந்து வேகமாக வெளியேறி வருகிறது.

ஒப்பந்தம்
அமெரிக்கா - தாலிபான் ஒப்பந்தத்தின்படி ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும், தாலிபான்களை அமெரிக்க படைகள் தாக்க கூடாது. இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி தாலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் 85% நிலப்பகுதியை மீட்டுவிட்டது. ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடனான எல்லையை தாலிபான் கைப்பற்றிவிட்டது. அமெரிக்கா படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வேகமாக வாபஸ் வாங்கியது இதற்கு ஒரு காரணம்.

தப்பான நடவடிக்கை
ஆப்கான் படைகள் அசுவாசப்படுத்திக் கொள்ளவும், தங்கள் இருப்புகளில் தயார் நிலையில் இருக்கவும் கூட அவகாசம் தராமல், சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்க படைகள் வெளியேறி உள்ளது. ஆப்கான் படைகள் அமெரிக்கா சென்ற அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு முன், சுதாரிக்கும் முன் தாலிபான் படைகள் ஆப்கான் படைகளை சுற்றி வளைத்து வருகிறது. ஆப்கான் படைகளுக்கு பிடன் சொன்னது போல போதிய பயிற்சி எல்லாம் வழங்கப்படவில்லை.

சரண்டர்
இதனால் அவர்களும் வேறு வழியின்றி தாலிபான்களிடம் சரண்டர் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 280 மாவட்டங்களில் தற்போது ஆப்கானிஸ்தான் கொடியும், பிரதமர் காணி புகைப்படமும் நீக்கப்பட்டு தாலிபானின் வெள்ளை கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அமெரிக்கா ஆப்கானை மட்டுமின்றி மற்ற நட்பு நாடுகளையும் கைவிட்டுள்ளது.

விதி
விதிப்படி அமெரிக்கா படைகளை வாபஸ் வாங்கிய போது தனது நட்பு நாடுகளின் தூதரகங்களை பாதுகாத்து இருக்க வேண்டும். தூதரகங்களுக்கு முன் அமெரிக்க படைகள் கடைசி நாள் வரை பாதுகாப்பிற்கு நின்று இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்க அப்படி செய்யாமல், விட்டால் போதும் என்று எந்த திட்டமிடலும் இன்று வேக வேகமாக வெளியேறி வருகிறது. ஜி 7, ஜி 20 நாடுகள் என்று பல நாடுகளில் தூதரகங்கள் இதனால் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு இன்றி நிலைகுலைந்துள்ளது.

நேட்டோ
முக்கியமாக நேட்டோவில் உள்ள நாடுகளின் தூதரகங்கள் கூட பாதுகாப்பு இல்லாமல், தாலிபான் வசம் செல்லும் நிலைக்கு சென்றுள்ளது. அமெரிக்க அதிபர் பிடனின் அவசரமான வெளியேற்ற உத்தரவால் அமெரிக்க படைகள் தூதரகங்களை கூட பாதுகாக்காமல் வெளியேறி உள்ளது. விளைவு இப்போது அந்தந்த நாடுகள் தங்களின் விமானப்படை மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து தூதரக அதிகாரிகளை காப்பாற்றும் நிலைக்கு சென்றுள்ளது.

இந்தியா
முதல் கட்டமாக இந்தியா கந்தகார் துணை தூதரகத்தில் இருந்து இந்திய அதிகாரிகளை மீட்டு உள்ளது. அமெரிக்க படைகள் இங்கிருந்து வெளியேறியதால் இந்த துணை தூதரகம் தாலிபான் வசம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா இப்படி கைவிட்ட நிலையில் இந்தியா துணிச்சலாக தங்கள் நாட்டு அதிகாரிகளை மீட்டு உள்ளது. சீனாவும் இதேபோல் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு அதிகாரிகள் 20 பேரை மீட்டுள்ளது.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவும் இதேபோல் தங்கள் நாட்டு அதிகாரிகளை இந்த வாரம் மீட்க உள்ளது. அமெரிக்கா தனது நட்பு நாடுகள் எதற்கும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அளிக்காமல் அவசரமாக வெளியேறி உள்ளது. அமெரிக்காவின் வெளியேற்றம் அந்த நாட்டை உலக நாடுகள் மத்தியில் வீக்கான நாடாக வெளிப்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த செயல் சர்வதேச அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்த போகிறது.












Click it and Unblock the Notifications