"பசிக்கு டீ கூட குடிக்க முடியவில்லையே".. விண்ணை முட்டிய விலைவாசி.. கண்ணீர் விடும் பாகிஸ்தான் மக்கள்
உணவுப் பஞ்சம் காரணமாக தினசரி இரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பாகிஸ்தான் மக்களுக்கு ஆறுதலாக இருந்தது டீ மட்டும்தான். பல நேரங்களில் சாப்பாடுக்கு பதிலாக டீயை குடித்துதான் அவர்கள் பசியாறி வந்தனர்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பட்டினியும், உணவுப் பஞ்சமும் தலைவிரித்தாடி வரும் நிலையில், அந்நாட்டு மக்களின் நிலைமை பரிதாபகரமாக மாறி வருகிறது.
நாளொன்றுக்கு இரண்டு வேளை உணவு கூட இல்லாமல் பாகிஸ்தான் மக்கள் பட்டினியில் உழன்று வருகின்றனர். இந்த சூழலில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் டீ தூளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
சாப்பாடு இல்லாததால் டீ குடித்து சிறிது பசியாறி வந்த அந்நாட்டு மக்களுக்கு தற்போது சாதாரண டீ கூட எட்டாக்கனியாக மாறியது தான் கொடுமையிலும் கொடுமை.

சூழ்ந்தது இருள்
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பெய்த பயங்கர மழையும், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கட்டுங்கடங்காத வெள்ளமும் அந்நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. இந்த வெள்ளத்தால் கோடிக்கணக்கிலான ஏக்கரில் பயிடப்பட்ட உணவுப் பயிர்கள் நாசமாகின. பயிர்சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு அந்நாட்டில் கடும் பற்றாக் குறை ஏற்பட்டது.

கூடா நட்பு..
இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பு ஒருபுறம் என்றால், தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக பெரும் நிதிப்பற்றாக்குறையில் பாகிஸ்தான் மூழ்கிப் போனது. மேலும், நட்பு பாராட்டுகிறோம் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு அதிக அளவில் கடன் கொடுத்த சீனா, அந்நாட்டின் பல பகுதிகளை குத்தகைக்கு எடுத்து ஆக்கிரமித்துவிட்டது. இதனால் பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

கோதுமைக்கு வெட்டு குத்து
இதன் காரணமாக, பாகிஸ்தானில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனிடையே, பொருளாதார நெருக்கடியால் அங்கு உணவுப்பொருட்கள், மண்ணெண்ணெய், காய்கறிகள் ஆகியவற்றின் விலை விண்ணை தொட்டு வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.4000-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.400, ஒரு கிலோ வெங்காயம் ரூ.380, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அரசு குடோன்களில் இருந்து ஓரளவுக்கு குறைந்த விலையில் கோதுமை வாங்க மக்கள் இடையே கடும் சண்டை ஏற்பட்டு வருகிறது. கோதுமைக்காக ஒருவரையொருவர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளும் நிலைக்கு அந்நாட்டு மக்கள் வந்துவிட்டனர்.

டீ விலை ரூ.1,600
உணவுப் பஞ்சம் காரணமாக தினசரி இரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பாகிஸ்தான் மக்களுக்கு ஆறுதலாக இருந்தது டீ மட்டும்தான். பல நேரங்களில் சாப்பாடுக்கு பதிலாக டீயை குடித்துதான் அவர்கள் பசியாறி வந்தனர். தற்போது அதற்கும் வேட்டு வைத்துவிட்டது விலைவாசி. ஒரு கிலோ டீ தூளின் விலை ரூ.1,600 வரை உயர்ந்துவிட்டது. இந்தியாவில் ஒரூ கிலோ டீ தூள் விலை ரூ.150 முதல் ரூ.250 வரை என்றால், விலை வித்தியாசத்தை பார்த்துக் கொள்ளுங்கள். பாகிஸ்தான் துறைமுகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து டீ தூள்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் பணம் இல்லாததால், டீ தூளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.












Click it and Unblock the Notifications