இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில்.. ஹஜ் யாத்திரை தொடங்கியது.. 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி..!
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தொடங்கியது.
அதில் பங்கேற்க சவுதி அரேபியாவின் குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் வசிப்போருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அதன் படி 60,000 யாத்ரீகர்கள் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர். இதனிடையே கடந்தாண்டு கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்ததால் 10,000 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது.

5 கடமைகள்
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ். ஹஜ் என்றால் நாடுதல் என்று பொருள். இறைவனை நாடி மெக்காவில் உள்ள கஃபத்துல்லாவுக்கு சென்று வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதே ஹஜ் பயணம் என்பதாகும். இந்தப் பயணத்தை நினைக்கும் போதெல்லாம் ஆண்டு முழுவதும் செய்ய முடியாது. இஸ்லாமிய மாதத்தின் படி துல்ஹஜ் மாதம் மட்டுமே இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

துல்ஹஜ்
அந்த வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ்ஜில் 60,000 யாத்ரீகர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இது கடந்தாண்டை விட சற்று அதிகமாகும். ஆம், கடந்தாண்டு கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்ததால் 10,000 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னர் ஆண்டுதோறும் 25 லட்சத்திற்கும் குறையாத வகையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மெக்காவில் சங்கமிப்பார்கள்.

வணக்கம்-வழிபாடு
துல்ஹஜ் மாதம் 8-ம் நாளில் அதிகாலை (பஜ்ர்) தொழுகைக்கு பிறகு மினாவுக்கு சென்று அன்றைய தின தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகளை நடத்திவிட்டு இரவு அங்கே தங்க வேண்டும். பிறகு அடுத்தநாளான துல்ஹஜ் 9-ம் நாள் அரஃபா மைதானத்துக்கு சென்று கூடாரங்களில் தங்க வேண்டும். அடுத்ததாக முஸ்தலிபா உள்ளிட்ட சூரிய அஸ்தமனத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு துல்ஹஜ் 10-ம் நாள் (அதாவது பக்ரீத் அன்று) மினாவிலிருந்து மெக்காவுக்கு திரும்ப வேண்டும்.

ஏக்கம்
இப்படி பல சம்பிரதாயங்கள் இருப்பதால் மனிதக் கடலாகவே மெக்கா நகரம் இம்மாதம் முழுவதும் காட்சியளிக்கும். ஆனால் இதெல்லாம் 2019-ம் ஆண்டு வரை மட்டுமே. எப்போது கொரோனா பரவத் தொடங்கியதோ அப்போது முதலே மெக்காவில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இதனால் தங்களின் இறுதிக் கடமையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் பல இறை நம்பிக்கையாளர்கள் உயிரிழந்துள்ள சோக நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

சமூக இடைவெளி
இதனிடையே இந்தாண்டு கடும் கட்டுப்பாடுகளுடன், கண்காணிப்புடனும் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி தந்துள்ள சவுதி அரேபியா அரசு, யாத்ரீகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், எந்தவொரு இணை நோய்களாலும் பாதிக்கப்படாதவர்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில்
இஸ்லாமிய வரலாற்றிலேயே கடந்தாண்டு மட்டும் தான் 10,000 பேர் என்றளவில் மிக குறைவானோர் ஹஜ் யாத்திரை செய்திருக்கின்றனர். கொரோனா தற்போது உலகம் முழுவதும் படிப்படியாக கட்டுக்குள் வருவதால் அடுத்தாண்டு லட்சங்களில் யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications