தொடரும் இழுபறி.. தாமதமாகும் தேர்தல் முடிவுகள்! பாகிஸ்தானில் போராட்டத்திற்கு இம்ரான் கான் கட்சி அழைப்பு
இஸ்லாமாபாத்: பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், அரசியல் குழப்பங்களிலும் தீவிரமாக சிக்கியிருக்கிறது. இதிலிருந்து மீள தேர்தல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில், அதன் முடிவுகள் வெளியாவதில் தாமதம் இருப்பதாக கூறி இம்ரான் கட்சியினர் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், தொடர்ச்சியாக நீடித்து இருக்கும் பொருளாதார நெருக்கடி என பாகிஸ்தான் கடும் பாதிப்புகளை சந்தித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, அதன் பிரதமர் இம்ரான் கான் மீது எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி என அரசியல் பேரிடரிலும் பாகிஸ்தான் சிக்கியிருந்தது. இதிலிருந்து நாடு மீள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவதுதான் ஒரே வழி என தேர்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த 8ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கு முந்தைய நாள் பாலுசிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. இதில் சுமார் 25 பேர் பலியான நிலையில், தேர்தல் அமைதியாக நடக்குமா என்று கேள்வி எழுந்தது. எனவே தேர்தலுக்காக நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. பின்னர் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. அந்நாட்டின் சட்ட திட்டத்தை பொறுத்த அளவில், தேர்தல் நடைபெற்று 14 நாட்களுக்குள் வாக்கு எண்ணிக்கையின் முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.
ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிப்பதில் தொடர் தாமதம் நீடித்து வருகிறது. பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இருப்பினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பிடிஐ), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தற்போதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி, தெஹ்ரீக்-இன்சாப் (PTI) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு 102 தொகுதிகள் கிடைத்துள்ளன. இருப்பினும் பெரும்பான்மையை பெற இன்னும் 31 தொகுதிகள் தேவைப்படுகிறது. மறுபுறம், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி 73 தொகுதிகளையும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 54 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே இந்த இரு கட்சிகளும் பிடிஐ-க்கு எதிராக கைகோர்க்க திட்டமிட்டு வருகின்றன.
அப்படி கைகோர்த்தாலும் கூட பெரும்பான்மை கிடைக்காது. அதற்கு உதிரி கட்சிகளின் வெற்றியாளர்களையும் தங்களுடன் இணைக்க வேண்டும். இது தவிர 8 தொகுதிகளுக்கான ரிசல்ட் இன்னும் வெளியாகவில்லை. இணையதளம் பிரச்னை காரணமாக வெற்றி முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த பிடிஐ கட்சி தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications