மாபெரும் ஊழல்.. கோவாக்சின் ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்த பிரேசில்.. பரபர பின்னணி - என்ன நடந்தது?
ரியோ டி ஜெனிரோ: பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்குச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதவிக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மாறியுள்ளது.
பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன.
கொரோனா தடுப்பூசிகளுக்கான தேவை மிக அதிகமாக உள்ளதால், அனைத்து நாடுகளுக்கும் தேவையான வேக்சின்கள் கிடைப்பதில்லை. பணக்கார நாடுகளுக்கு மட்டுமே அதிகளவில் வேக்சின்கள் கிடைக்கின்றன.

கோவாக்சின் ஒப்பந்தம்
இதனால் மற்ற வளரும் நாடுகள், தங்களுக்கு இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி வேக்சின் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பிரேசிலும் பாரத் பயோடெக் நிறுவனமும் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டது. முதல்கட்டமாக நான்கு லட்சம் கோவாக்சின் என மொத்தம் இரண்டு கோடி டோஸ்களை இறக்குமதி செய்ய 324 மில்லியன் டாலருக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

மிகப் பெரிய ஊழல்
கடந்த பிப்ரவரி மாதம் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியானது. குறைவான விலைக்கு கோவாக்சின் தடுப்பூசியை அளிக்க பாரத் பயோடெக் முன் வந்தபோதும், அதிக விலைக்கு வாங்குவதைப் போலப் பிரேசில் ஒப்பந்தத்தை ரெடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அந்நாட்டின் சுகாதாரத் துறையில் உள்ளே சிலரும்கூட இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறி புதிய புயலைக் கிளப்பினர்.

அதிபருக்குச் சிக்கல்
இது அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்நாட்டின் பொதுமக்கள் பலரும் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இது அவருக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜெய்ர் போல்சனாரோ, ஊழல் ஒழிப்பையே முன்னிறுத்தி பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடித்தவர்.

கார் வாஷ்
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பிரேசில் அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் கார் வாஷ் என்ற மிகப் பெரிய ஊழல் புகார் வெளிச்சத்திற்கு வந்தது. இதில் அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் தொடங்கி பலரும் கைது செய்யப்பட்டனர். அப்போது தீவிர வலதுசாரியான ஜெய்ர் போல்சனாரோ, தான் அதிபரானால் ஊழல் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்று பிரசாரங்களில் முழங்கினார். இது அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் அவரது இமேஜை உயர்த்தியது. இதன் மூலமே அவர் தேர்தலில் வென்றார்.

அதிபர் உத்தரவு
இருப்பினும், தற்போது அவரது ஆட்சியிலேயே, அதுவும் வேக்சின் வாங்குவதிலே மிகப் பெரிய ஊழல் என்ற குற்றச்சாட்டு அவரை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. அதிலும் அங்கு அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இது ஜெய்ர் போல்சனாரோவுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் அரசின் பெயர் கெடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க அவர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கோவாக்சின் ஒப்பந்தம் ரத்து
இதையடுத்து இது பற்றி அந்நாட்டின் சுகாதாரத் துறை முதல்கட்ட விசாரணையை நடத்தியது. இருப்பினும், அதில் ஊழல் முகாந்திரம் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தீவிர விசாரணை மேற்கொள்ள ஏதுவாக இந்த ஒப்பந்ததைத் ரத்து செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டின் நாடாளுமன்ற குழுவும் விசாரணையைக் கையில் எடுத்துள்ளது.

அதிபர் தேர்தல்
அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீதான அதிருப்தி அங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புகளும்கூட 50% மேல் மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருப்பதையே காட்டுகிறது. அடுத்த ஆண்டு தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், இந்த கோவாக்சின் ஊழல் புகாரும் அவரை பெரிய சிக்கலில் தள்ளியுள்ளது. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் அவர் வெல்ல வாய்ப்பில்லை..!












Click it and Unblock the Notifications