குழந்தைகளையும் உடல் உறுப்புகளையும் விற்கும் ஆப்கான் மக்கள்.. 97 % பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ்
காபூல் : ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அந்நாட்டில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளையும், உடல் உறுப்புகளையும் விற்று உயிர் பிழைப்பதாக ஐநாவின் உலக உணவு திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி வேதனை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆப்கானின் எதேச்சதிகாரம் காரணமாக பல்வேறு உலக நாடுகள் அந்நாட்டு தூதரக உறவையும் உதவிகளையும் நிறுத்திவிட்டன.
பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளால் பல்வேறு உலக நாடுகள் ஆப்கானை தனிமைப்படுத்திய நிலையில் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது அமெரிக்கா, சர்வதேச நிதியம், உலக வங்கி போன்றவை ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவதை நிறுத்தி விட்டன.

ஆப்கான் உணவும் பஞ்சம்
இந்த நிலையில் அந்நாட்டில் தற்போது கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உள்ளதாக ஐநாவின் உலக உணவுத் திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி வேதனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேசிய அவர் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் மேற்கத்திய நாடுகள் மக்களின் பசிப்பிணி போக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் கொரோனா காலத்தில் அதிக அளவில் பணம் சம்பாதித்த உலக பணக்காரர்கள் தற்போது ஆப்கான் மக்களின் பசியை தீர்க்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

குழந்தைகள் விற்கப்படும் அவலம்
பசிக்காக ஒரு பெண் தனது மகளை வேறு ஒரு குடும்பத்திற்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக கூறினார்,. தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தானில் மக்கள் உயிருடன் வாழ்வதற்காக தங்களது குழந்தைகளையும், அவர்களின் உடலையும் விற்கும் நிலைமையில் இருக்கின்றனர் எனவும், ஆப்கானிஸ்தானில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் வாடுகின்றனர் என்பதால், சர்வதேச நாடுகள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உயிர்பறிப்பு தண்டனை
ஆப்கானிஸ்தான் கடந்த சில வருடங்களாக வறட்சி, பொருளாதார இழப்பு, கொரோனா பெருந்தொற்று, ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட இழப்புகள் என பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளது எனவும், அந்நாட்டில் சுமார் 2.4 கோடி மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் 97 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இருந்தும் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புக நினைத்தாலும் தாலிபான்கள் உயிர்பறிப்பையே தண்டனையாக வழங்குவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உதவிக்கரம் நீட்ட கோரிக்கை
தாலிபான்களுடன் நடைபெற்ற சண்டையினால் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மிகவும் வறுமையான நாடாகத்தான் இருக்கிறது. ஆப்கான் மக்கள் குழந்தைகளை விற்க முன்வருகின்றனர். தங்களைவிட யாரால் குழந்தைக்கு கூடுதல் உணவளிக்க முடிகிறதோ அவர்களுக்கு குழந்தைகளை கொடுக்க பெற்றோர்கள் காத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களுக்கு உலக நாடுகள் உதவி வழங்குவதை விரைவுப்படுத்த வேண்டும் எனவும் ஐநாவின் உலக உணவு திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி வேதனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications