வீடு வீடாக புகுந்து எதிரிகளை பழி வாங்கும் தாலிபான்கள்.. ஐ.நா. பகீர் ரிப்போர்ட்!
காபூல்: வீடு வீடாக புகுந்து எதிரிகளை பழிவாங்க தாலிபான்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக ஐ.நா. சபையின் அறிக்கையொன்று எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. அதேநேரம், நாங்கள் அப்படி செய்ய மாட்டோம் என்று தாலிபான்கள் தரப்பு உறுதியளித்துள்ளது.
20 ஆண்டு கால சிவில் போருக்கு பிறகு ஆப்கனை கைப்பற்றியுள்ளனர் தாலிபான்கள். எனவே இதுவரை அரசுக்கு ஆதரவாக இருந்தவர்களை கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் பலரும் நாட்டை விட்டே ஓடி வருகிறார்கள்.
இதனிடையேதான், ஐ.நா.சபையின் எச்சரிக்கை அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில், தாலிபான்கள் வீடு வீடாக சென்று எதிராளிகளை தேடி வருவதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.

மக்கள் ஏன் ஓடுகிறார்கள்
இந்த ரகசிய எச்சரிக்கையை ஏ.எப்.பி செய்தி ஏஜென்சி செய்தியாக வெளியிட்டுள்ளது. நேட்டோ மற்றும் அமெரிக்க படைகளுக்கு உதவி செய்தவர்களின் வீடுகளுக்கே தாலிபான்கள் நேரடியாக போய் சோதனைகள் நடத்துவதாக அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்றும், தலிபான்கள் 1996-2001 நடத்திய மோசமான ஆட்சியில் இருந்து "நேராக வேறுபடுவார்கள்" என்றும் உறுதி அந்த அமைப்பால் இப்போது அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஏன் ஆப்கனை விட்டு வெளி நாடுகளுக்கு ஓடுகிறார்கள் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

ஷரியத் சட்டப்படி தண்டனை
"எதிராளிகளின் குடும்பங்களை அவர்கள் குறிவைத்துள்ளனர், மேலும் 'ஷரியத் சட்டத்தின்படி' அவர்களது குடும்பங்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டிக்கின்றனர்" என்று ஐ.நா. குழுவின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டியன் நெல்லெமன் AFP ஏஜென்சியிடம் கூறியுள்ளார். "நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுடன் பணிபுரிந்த நபர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சித்திரவதை மற்றும் மரணதண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று நாங்கள் அச்சப்படுகிறோம்." என்று அவர் கூறியுள்ளார்.

தாலிபான்கள் மறுப்பு
அதேநேரம், தலிபான்கள் கடந்த காலங்களில் நடத்திய இதுபோன்ற தேடுதல் வேட்டைகளை இனிமேல் செய்ய மாட்டோம் என்று மறுத்துள்ளதோடு, தங்கள் அமைப்பினர், தனிப்பட்டோர் வீடுகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அல் ஜசீரா நிருபர் ராப் மெக்பிரைட், இதுபற்றி கூறுகையில், தலிபான்கள் தங்களுக்கு பழிவாங்கல்களில் ஆர்வம் இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால் மாகாணங்களில், உள்ளூர் மட்டங்களில், மக்கள் குறிவைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. பழிவாங்கல்கள் நடந்துள்ளன. மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

கருப்புக் கொடி போராட்டங்கள்
இந்த வாரம் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் தலிபான்களுக்கு எதிரான ஒரு சில போராட்டங்கள் நடந்துள்ளன. சில குழுக்கள் காபூலில் தாலிபான்களுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டங்களை நடத்தினர். "சர்வதேச சமூகத்திடம் நாங்கள் வைக்கும் கோரிக்கையெல்லாம் அவர்கள் ஆப்கானிஸ்தான் மீது தங்கள் கவனத்தை திருப்ப வேண்டும். 20 வருட சாதனைகளை வீணாக்க விடக்கூடாது" என்று ஒரு போராட்டக்காரர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு
கருப்பு கொடி அசைத்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க ஜலாலாபாத்தில் தாலிபான் போராளிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட துணை அதிபர் அம்ருல்லா சலே மற்றும் கொல்லப்பட்ட தாலிபான் எதிர்ப்பு போராளியின் மகன் அஹ்மத் மசூத் தலைமையில் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் ஒரு எதிர்ப்பு இயக்கம் உருவாகிறது என்று ரஷ்யா ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. "ஆப்கானிஸ்தானின் முழுப் பகுதியையும் தலிபான்கள் கட்டுப்படுத்தவில்லை" என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். காபூலின் வடகிழக்கில் உள்ள பஞ்ஜீர் பள்ளத்தாக்கில், ஆப்கானிஸ்தானின் மிகவும் புகழ்பெற்ற தாலிபான் எதிர்ப்பு போராளி அகமது ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத், "தனது தந்தையின் வழியில் புரட்சிக்கு தயாராக இருப்பதாக" செர்ஜி லாவ் ரோவ் கூறினார்.

தப்பியோடும் மக்கள்
தாலிபான்கள் தலைநகருக்குள் நுழைந்ததிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர். ஆகஸ்ட் 14 முதல் காபூலில் இருந்து சுமார் 9,000 பேரை விமானம் மூலம் அனுப்பியதாக அமெரிக்கா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் விளையாட்டு கூட்டமைப்பு தேசிய இளைஞர் அணிக்கான கால்பந்து வீரர் அமெரிக்கா செல்லும் ராணுவ விமானத்தில் தப்பி சென்றபோது வானில் இருந்து கீழே விழுந்தது இறந்த சம்பவமும் அரங்கேறியது.












Click it and Unblock the Notifications