சூர்யா-தேவா நட்பை தூக்கி சாப்பிடும்.. டிரம்ப்-நெதன்யாகு! இந்த விவகாரத்தில் கூடவா தலையீடு?
வாஷிங்டன்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக, அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். போகிற போக்கை பார்த்தால், இவர்கள் சூர்யா-தேவா நட்பையே தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் போல இருக்கிறது.
லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் நெதன்யாகு மீது கடந்த 2019ம் ஆண்டு குற்றச்சாடடு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளை நெதன்யாகு மறுத்துள்ளார். இருப்பினும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 2020ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் அல்லது அவர் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
டிரம்ப்பின் கருத்து
நெதன்யாகு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார் என்று தான் அறிந்ததாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இஸ்ரேலுக்காக நிறைய விஷயங்களை செய்த ஒரு சிறந்த ஹீரோவுக்கு உடனடியாக மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். டெல் அவிவ் நீதிமன்றத்தில் நெதன்யாகுவின் குறுக்கு விசாரணை கடந்த ஜூன் 3 முதல் தொடங்கியது. அது நிறைவடைய சுமார் ஒரு வருடம் ஆகும்.
மன்னிப்பை கோரும் டிரம்ப்
நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோக்கிடம் உள்ளது. ஆனால், மன்னிப்பு தற்போது பரிசீலனையில் இல்லை என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இது தொடர்பாக எந்த கோரிக்கையும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளன. இப்படி இருக்கையில்தான் டிரம்ப் தனது நண்பருக்காக சோஷியல் மீடியாவில் போஸ்ட்டுகளாக போட்டு தள்ளியுள்ளார். தனது பதிவில், "இஸ்ரேலை காப்பாற்றியது அமெரிக்காதான். இப்போது நெதன்யாகுவை காப்பாற்றப் போவதும் அமெரிக்காதான்" என்று கூறியுள்ளார்.
நெதன்யாகு மீதான குற்றச்சாட்டுகள்
1. தொழிலதிபர்களிடமிருந்து விலை உயர்ந்த பரிசுகளைப் பெற்றது (Case 1000)
2. ஊடக நிறுவனங்களுடன் சாதகமான செய்தி வெளியிடுவதற்காக ஒப்பந்தம் செய்தது (Case 2000)
3. சட்டவிரோதமாக சலுகைகளை வழங்கியது (Case 4000)
இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்காகத்தான் நெதன்யாகு விசாரிக்கப்பட்டு வருகிறார். Case 1000 வழக்கில், "
ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் அர்னான் மில்ச்சன் மற்றும் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் ஜேம்ஸ் பேக்கர் ஆகியோரிடமிருந்து, நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா தொடர்ந்து பல ஆண்டுகளாக விலை உயர்ந்த பரிசுகளைப் பெற்று வந்ததாகவும், இதற்கு கைமாறாக இருவருக்கும் சில விஷயங்களில் நெதன்யாகு உதவி செய்திருக்கிறார் என்பதும்தான் குற்றச்சாட்டு. இந்த உதவிகள் மூலம் பரஸ்பரம் இரு தரப்பும் பலன் அடைந்துள்ளன. ஆனால், அரசு பதவியை கோடீஸ்வரர்களுக்காக லஞ்சம் பெற்றுக்கொண்டு பயன்படுத்தியுள்ளார் என்பதால் விசாரணை நடந்து வருகிறது.
Case 2000-ஐ பொறுத்தவரை, நெதன்யாகு இஸ்ரேலின் முன்னணி ஊடக நிறுவனத்துடன் சட்டவிரோதமாக ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. அதாவது இயல்பாகவே பத்திரிகைகள் இரண்டு தரப்பாக இருக்கும். ஒன்று ஆளும் கட்சி. இன்னொன்று எதிர்க்கட்சி. இவர் ஒரு முன்னணி பத்திரிகை ஊடகத்தை ஆளும் கட்சிக்கு ஆதரவாக இழுத்திருக்கிறார். பதிலுக்கு, இந்த பத்திரிகை ஊடகத்திற்கு போட்டியாக இருக்கும் எதிர்கட்சி பத்திரிகை ஊடகத்தின் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.
சிம்பிளாக சொல்வதெனில், நீ எனக்கு ஆதரவாக ஆஹா, ஓஹோ என செய்தி எழுத வேண்டும். பதிலுக்கு நான் உன்னுடைய போட்டியாளை கவனித்துக்கொள்கிறேன் என்கிற தொணியில் நெதன்யாகு செயல்பட்டிருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு.
மூன்றாவது வழக்கில், நெதன்யாகு தகவல் தொடர்பு அமைச்சராகவும் இருந்தபோது, இஸ்ரேலின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான "பெசக்" நிறுவனத்திற்குச் சாதகமான ஒழுங்குமுறை முடிவுகளை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக தலைவன் நெதன்யாகு லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பு வந்தால் நிச்சயம் நெதன்யாகு கைது செய்யப்படுவார் என்று சொல்லப்படுகிறது. எனவேதான் நட்புக்காக டிரம்ப் ஓடோடி வந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications