ஈரான் போர்: உச்சக்கட்ட பரபரப்பில் வெள்ளை மாளிகை.. டிரம்ப்-ன் அடுக்கடுக்கான பொய்களால் வந்த வினை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது தொடர்பாக வெள்ளை மாளிகை சிச்சுவேஷன் அறையில் உயர் மட்ட அவசர கூட்டத்தை நடத்தியுள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்துக்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணையை நேற்று மூடப்பட்டு உள்ளதாக ஈரான் ராணுவம் IRGC அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான் விவகாரம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இதுவரை இறுதி தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இதனால் இரு நாடுகள் மத்தியில் கூடிய விரைவில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாவிட்டால், அடுத்த சில நாட்களில் போர் மீண்டும் தொடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

யுரேனியம் முக்கிய விவாதம்
ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை அமெரிக்காவுக்கு கொடுப்பது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில் ஹார்முஸ் நீரிணையில் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது. டிரம்ப், இன்று மாலைக்குள் ஈரானுடன் ஏதேனும் ஒப்பந்தம் ஏற்படப் போகிறதா என்பது தெரியும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் அமெரிக்காவை ஹார்முஸ் வைத்து எந்த வகையிலும் பிளாக்மெயில் செய்ய முடியாது என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே டிரம்ப் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வாய்ப்புகள் இல்லை என ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்த நிலையில், இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்பும், டிரம்ப்-ன் பொய்களும்
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அதிகார்ப்பூர்வ அறிக்கையில், டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அடுத்தடுத்த ட்ரூத் சோசியல் பதிவுகளுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவுக்கு யுரேனியம் வழங்குவது, ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பது, அமெரிக்க கடற்படை தடையைத் தொடர அனுமதிப்பது மற்றும் யுரேனியம் செறிவாக்கத்தை முற்றிலும் நிறுத்துவது போன்றவை டிரம்ப்-ன் டிரம்பின் ஏப்ரல் பொய்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே" என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தக் கூற்றுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று ஈரான் தரப்பு அடித்து கூறியுள்ளது.
ஹார்முஸ் திறப்புக்கு நிபந்தனை
ஈரான் தரப்பில் இருந்து வெளியான மற்றொரு முக்கிய அறிவிப்பில், ஹார்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்றால் அமெரிக்கா, தனது (ஈரான்) துறைமுகங்கள் மீதான கடற்படை முடக்கத்தை முழுமையாக நீக்க வேண்டும். இந்த நிபந்தனை நிறைவேற்றப்படாவிட்டால் ஹார்முஸ் நீரிணையைத் திறக்க மாட்டோம் என்று ஈரான் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
2ஆம் கட்ட பேச்சுவார்த்தை
ஈரான் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சயீத் கதீப்சாதே, அமெரிக்காவுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு இதுவரை எந்த தேதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளார். அமெரிக்கா தனது அளவுக்கு அதிகமான கோரிக்கைகளையும், ஆசையையும் கைவிட வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இவை அனைத்தும் பேச்சுவார்த்தை முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக உள்ளது.
அமெரிக்க கடற்படை முடக்கம்
டிரம்ப், ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முடக்கம் ஒப்பந்தம் ஏற்படும் வரை தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஈரான் எந்த வகையிலும் அமெரிக்காவை பிளாக்மெயில் செய்ய முடியாது என்ற எச்சரிக்கையையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான்-அமெரிக்கா இடையேயான இந்தப் புதிய மோதல், உலக பொருளாதாரத்தின் முக்கிய பகுதியான எண்ணெய் வர்த்தகத்தை நேரடியாக பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. மேலும் ஹார்முஸ் திறக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது மூலம் கச்சா எண்ணெய் விலை 13 சதவீதம் வரையில் குறைந்ததது. ஆனால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மீண்டும் 100 டாலருக்கு உயர வாய்ப்பு.












Click it and Unblock the Notifications