காசாவில் அமைதி.. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஹமாஸ்-இஸ்ரேல் உடன்பாடு! கைதிகள் விரைவில் விடுதலை

Subscribe to Oneindia Tamil

காசா: கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களின் உயிரை பலி கொண்ட போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு ஹமாஸ்-இஸ்ரேல் உடன்பட்டிருப்பதாகவும், விரைவில் பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடீயாவில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் காசா சமாதான திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அனைத்து பணயக்கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். மேலும், இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொண்டபடி குறிப்பிட்ட தூரம் வரை பின்வாங்கும். இது ஒரு வலிமையான, நீடித்த, நிலையான அமைதிக்கான முதல் படியாகும்" என்று கூறியிருக்கிறார்.

Trump Gaza Israel

இந்த அறிவிப்பானது, இரண்டு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் அமெரிக்க அதிகாரிகளால் நடத்தப்பட்ட மறைமுகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், ஹமாஸை நிராயுதபாணியாக்குதல் மற்றும் காசாவின் எதிர்கால ஆட்சி போன்ற பிற முக்கிய விவகாரங்கள் குறித்து டிரம்ப் தனது பதிவில் தெளிவுபடுத்தவில்லை.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, X தளத்தில் இதை ஒரு சிறந்த நாள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கும், எங்கள் அன்புக்குரிய பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு கொண்டு வருவதற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலிய படைகள் காசாவிலிருந்து வெளியேறுதல் மற்றும் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என்று ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை முழுமையாகச் செயல்படுத்த இஸ்ரேலை கட்டாயப்படுத்த டிரம்ப், உறுதியளித்த நாடுகள் மற்றும் பிற அரபு நாடுகளுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், "திங்கட்கிழமை முதல் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார். கத்தார் வெளியுறவு அமைச்சர் மாஜெத் அல்-அன்சாரி இது குறித்து கூறுகையில், "ஒப்பந்தம் மூலம் போர் முடிவுக்கு வரவும், இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் விடுதலைக்கும், நிவாரணப் பொருட்கள் நுழைவுக்கும் வழிவகுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

காசாவின் ஹமாஸ் நிர்வாகத்தின் சுகாதார அமைச்சகம், இஸ்ரேலிய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது கடந்த வாரத்தில் பதிவான மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையாகும். காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள உதவி விநியோக மையங்களில் உணவு சேகரிக்க முயன்றபோது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதியன்று நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் காசாவில் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு 251 பேர் பணயக்கைதிகளாகக் கடத்தப்பட்டனர்.

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67,183 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 20,179 குழந்தைகள் அடங்குவர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் தரவுகள் ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் நம்பகமானதாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் இஸ்ரேல் அவற்றை மறுக்கிறது.

ஆகஸ்ட் மாதத்தில் காசா நகரில், போரால் ஏற்பட்ட பஞ்சத்தில் சிக்கி 182 பேர் உட்பட, ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் 460 பேர் இறந்துள்ளனர் என்று காசா அமைச்சகம் கூறியது. ஆனால் காசாவில் பட்டினி இல்லை என்றும், உணவு மற்றும் பிற உதவிகளை இஸ்ரேல் எளிதாக்கி வருவதாகவும் நெதன்யாகு தொடர்ந்து மறுத்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+